search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relatives dies"

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் பிரசவத்தின் போது இளம்பெண் திடீரென்று உயிரிழந்ததை கண்டித்து மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உப்புவாடை பகுதியை சேர்ந்தவர் மாது. கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்சவள்ளி (வயது 28). இவர் ஆத்தூர் ராணிப்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.

    இந்த நிலையில் அம்சவள்ளி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார். இதனால் அவர் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி சென்று பரிசோதித்து வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா? என கேட்டறிந்து வந்தார். டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் தேவையான ஊட்டச்சத்துக்களும் எடுத்து வந்தார்.

    இந்த நிலையில் அம்சவள்ளிக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. காலை 9 மணிக்கு அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் உறவினர்கள் அழைத்து சென்று ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து வலியால் அலறி துடித்தார். இரவு 11 மணி அளவில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அம்சவள்ளிக்கு ரத்தபோக்கு அதிகம் ஏற்பட்டு, மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.

    இதையறிந்த கணவர் மற்றும் உறவினர்கள் பதறியபடி ஆஸ்பத்திரியில் இருந்த நர்சுகளிடம் அம்சவள்ளிக்கு ரத்தபோக்கு அதிகமாகி மயங்கி கிடக்கிறார். எனவே அவருக்கு உடனடியாக சிகிச்சை அளியுங்கள் என்று தெரிவித்தனர்.

    ஆனால், பணியில் இருந்த அந்த நர்சுகள், அலட்சியமாக எங்களுக்கு எல்லாம் தெரியும். இங்கு கூட்டம் கூடக்கூடாது. நீங்கள் அனைவரும் இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறி வெளியே அனுப்பினர்.

    இதனால் ஆஸ்பத்திரி வெளியே வரண்டா பகுதியில் கணவரும் மற்றும் அம்சவள்ளியின் பெற்றோரும், உறவினர்களும் சோகத்துடன் இருந்தனர்.

    இந்த நிலையில் அம்சவள்ளியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை அறிந்ததும் அதிகாலை 3 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அம்சவள்ளியை ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர்கள், அவரை பரிசோதித்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    இது குறித்து டாக்டர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அம்சவள்ளி ஏற்கனவே இறந்து விட்டார். எனவே அவரது உடலை உங்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறி சேலத்தில் இருந்து இலவச அமரர் ஊர்தி வாகனத்தில் அம்சவள்ளி உடல் ஆத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையறிந்த கணவர் மாது மற்றும் பெற்றோர் கதறி அழுதனர். ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு வாகனம் வந்ததும், அதன் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரிக்குள் செல்ல முடியாமல் பிணத்துடன் அமரர் ஊர்தி வாகனம் அங்கேயே நின்றது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மாது கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எனது மனைவி சாவுக்கு பணியில் இருந்த டாக்டர்களும், ஊழியர்களும் தான் காரணம். அவர்களது அலட்சிய போக்கினால் தான் எனது மனைவி இறந்துள்ளார். உடனடியாக கவனித்து, உரிய சிகிச்சை அளித்திருந்தால், காப்பாற்றப்பட்டு இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார், விசாரணை நடத்தி யார் மீது தவறு உள்ளதோ? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இருப்பினும் தொடர்ந்து பிணத்துடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
    ×