என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reconstruction of Ponnai Dam"

    • தடுப்புச் சுவர் அமைக்கப்படுவதால் குடியிருப்புகளுக்கு வெள்ள அபாயம் இருக்காது
    • 3 மாதத்தில் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 139 கோடியில் நீர்வளத்துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில், காட்பாடி வட்டத்தில் இரட்டை ஏரியான கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகள் புனரமைப்பு பணி ரூ.28.45 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளது.

    முத்தரசிகுப்பம் ஏரியின் தெற்கு பிரதான கால்வாய் ரூ.62 லட்சத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. அரும்பருத்தி பாலாற்றின் குறுக்கே ரூ.24.82 கோடியில் தரைகீழ் தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. தரைகீழ் தடுப்பணை 720 மீட்டர் நீளமும், 8 மீட்டர் உயரமும் கொண்டது.

    தரைகீழ் தடுப்பணை அமைந்தால் 2 கி.மீ சுற்றளவில் உள்ள 8 கிராமங்கள் 2500 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    குகையநல்லூர் அருகே பொன்னையாற்றின் குறுக்கே 270 மீட்டர் நீளமும் 1.50 மீட்டர் உயரம் கொண்ட தடுப்பணை ரூ.12.70 கோடியில் கட்டப்பட உள்ளது. தடுப்பணையில் மட்டும் 2.86 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். கவுன்டன்யா ஆற்றின் 2 கரைகளில் 2½ கி.மீ தொலைவுக்கு வெள்ள தடுப்புச் சுவர் அமைக்கப்படுவதால் குடியிருப்புகளுக்கு வெள்ள அபாயம் இருக்காது.

    ராணிப்பேட்டை மாவட்டம் திருபாற்கடல்-வளவனூர் கிராமத்தின் அருகே பாலாற்றின் குறுக்கே 1,345 மீட்டர் நீளமும் 9 மீட்டர் உயரம் கொண்ட தரைகீழ் தடுப்பணை ரூ.47.87 கோடியில் கட்டப்பட உள்ளது. இதன்மூலம் 1,316.48 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்தில் சரஸ்வதி ஆற்றில் கொத்தூர் கிராமம் முதல் கல்லாற்றுடன் இணையும் வரை 27 கி.மீ தொலைவுக்கு ரூ.9.94 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது. ஆம்பூர் வட்டம் நரியம்பட்டு கிராமத்தில் மலட்டாற்றின் குறுக்கே ரூ.11.83 கோடியில் 300 மீட்டர் நீளமும் 6.50 மீட்டர் உயரம் கொண்ட தரைகீழ் தடுப்பணை அமைக்கப்பட உள்ளது.

    பொன்னை ஆற்றின் குறுக்கே கடந்த 1856-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணை கடந்தாண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    அணையில் உள்ள ஷட்டர்கள் சேதம் ஏற்பட்டதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருக்கிறது.

    இதற்காக ரூ.19.46 கோடியில் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    அதேபோல், பொய்கை கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.18.79 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணியும், கோவிந்தம்பாடி அகரம் ஆற்றின் குறுக்கே ரூ.11.63 கோடியில் தடுப்பணை, குடியாத்தம் செதுக்கரை பகுதியில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே ரூ.11.21 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி என 3 பணிகளுக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் பெற்று அடுத்த 3 மாதத்தில் பணிகள் தொடங்கவும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ×