என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rare"

    • கிராமங்களின் வீதி ஓரங்களில், நுழைவாயில்களிலும் காணப்படும் கற்களிலான ‘‘சுமைதாங்கி’’ கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது.
    • கர்ப்பிணி பெண்கள் குழந்தையை பெறாமல் இறந்தால் வயிற்றில் இருந்த சுமையை இறக்கி வைக்க முடியாமல் போன அவர்களின் நினைவாக சுமைதாங்கி அமைக்கப்படும் வழக்கம்.

    அபிராமம்

    கிராமங்களின் வீதி ஓரங்களில், நுழை வாயில்களில் அரிதாகக் காணப்படும் கற்களிலான அமைப்பானது ''சுமைதாங்கி'' எனப்படுகிறது.

    முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் தற்போதுள்ளது போன்று வாகன வசதிகள் கிடையாது. மிகவும் எடை கொண்ட, பெரும் பொதிகளைச் சுமப்பதற்கு மாட்டு வண்டிகளை உப யோகித்திருப்பார்கள். அனைவரிடமும் மாட்டு வண்டி வசதியும் இருந்திருக்காது. அதனால் முற்காலத்தில் பல பேர் எடை கொண்ட பொதிகளைத் தலையிலும், தோளிலும் சுமக்க வேண்டிய கட்டாய இருந்துள்ளது.

    பொதிகளைச் சுமந்து நீண்ட தொலைவுக்கு கால்நடையாக செல்லும்போது, பொதிகளை அடிக்கடி இறக்கி வைத்து இளைப்பாற வேண்டி இருக்கும். தரையில் இறக்கி வைத்து திரும்பவும் பொதியைத் தலையிலும், தோளிலும் ஏற்றுவதென்பது சிரமமானது.

    அதை இலகுவாக்கவே வீதிகளில் இத்தகைய சுமை தாங்கிக் கற்களை முன்னோர்கள் அமைத்தனர். ஒரு நபரின் சராசரி உயரத்தைக்கணக்கில் வைத்து, பொதியை இறக்கி, ஏற்ற வசதியாக இந்த கற்கள் தகுந்த உயரங்களில் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

    பல இடங்களில் பொதி சுமப்பவர்களின் நலன் கருதி நிழல் தரும் மரங்கள், நீர்ச் சுனைகள், கால்நடைகளுக்கு நீர் வைப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகள் போன்றவற்றின் அருகில் சுமைதாங்கிகளை அமைத்துள்ளனர்.

    இதுகுறித்து ராமநாத புரம் மாவட்டம் அபிராமத்தை சேர்ந்த முதியவர் வழிவிட்டான் கூறியதாவது:-

    சில சுமைதாங்கிகளில் பெண்களின் பெயர்களும், தேதியும் பொறிக்கப்பட்டு இருப்பதை காணலாம். கர்ப்பிணி பெண்கள் குழந்தையை பெறாமல் இறந்தால் வயிற்றில் இருந்த சுமையை இறக்கி வைக்க முடியாமல் போன அவர்களின் நினைவாக சுமைதாங்கி அமைக்கப்படும் வழக்கம் ஆரம்பமானது என்று சொல்லப்படுகிறது.

    உண்மையிலேயே சுமைதாங்கிகளை முன்னோர்கள் இந்த காரணத்திற்காக அமைக்க தொடங்கினார்களா? அல்லது நீண்ட தூர கால்நடைப் பயணங்களில் பொதியை இறக்கி வைத்து, சிறிது நேரம் ஓய்வெடுக்கும் நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட சுமைதாங்கிகள், காலப் போக்கில் இறந்த கர்பிணிப் பெண்களுக்காக அமைக்கப்படும் ஒன்றாக மாறியதா? என்று தெரியவில்லை.

    எந்த காரணமானாலும் சுமைதாங்கி கற்களின் பயன்பாடானாது சுமை களை இறக்கி வைத்து சிறிது நேரம் இளைப்பாறுதல் என்ப தாகும். சுமைதாங்கிகளை அமைக்கும் வழக்கத்தின் பின்னணி எதுவாக இருந்தா லும், பல பேர் பயன் கொள்ளும் நோக்கமே கருத்தில் இருந்துள்ளது.

    பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி கூடக்கவலைப்படாத இந்த காலத்தில் எங்கிருந்தோ வரும் வழிப்போக்கர்களை, அவர்களின் சிரமங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் மனம் முன்னோர்களிடம் இருந்துள்ளது என்பது பெருமை தரும் விசயமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×