என் மலர்
நீங்கள் தேடியது "Rap Singer Vedan"
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- நீங்கள் நல்லா ஆரோக்கியமா இருப்பீங்க என்று வேடன் கூறினார்.
கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான 'வேடன்' சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின் பாடல்கள் அமைந்துள்ளது.
2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில், யூடியூபில் வெளிவந்த இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் கவனம் பெற்றார்.
"நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் பேசியிருந்தார்.
'மஞ்சும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார். டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் பழங்குடியினரின் போராட்டம் பற்றி 'வாடா வேடா' என்ற பாடலை எழுதி பாடியிருந்தார். திரைப்படங்களை தவிர்த்து சுயாதீன இசை ஆல்பங்களிலும் வேடன் கவனம் செலுத்தி வந்தார்.
இவரது பாடல்களில் இந்து மதத்தையும், பிரதமர் மோடியையும் அடிக்கடி வேடன் அவமதிக்கிறார் என பா.ஜ.க.வினர் அண்மையில் வேடன் மீது புகார் அளித்தனர். இதனிடையே வேடனுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுடன், ராப் பாடகர் வேடனிடம் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பலரும் பகிர்ந்தும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர். வீடியோவில் திருமாவளவன் பேசும் போது, அம்மா, அப்பா எல்லாம் என்ன பண்றாங்க? எங்க இருக்காங்க என கேட்டார். அதற்கு வேடன், அம்மா தவறி 4 வருடம் ஆகுது. அப்பா இருக்காங்க. கூலி வேலைக்கு போய்ட்டு இருக்காங்க. அவரால் வேலைக்கு போகாமல் இருக்க முடியாது என்றார்.
இதையடுத்து, கேரளாவில் எந்த இடத்தில் இருந்தீர்கள் என திருமாவளவன் கேட்க, திருச்சூர் தான் என வேடன் சொன்னார். மேலும் கேரளாவிற்கு அடிக்கடி வருவேன் என்று திருமாவளவன் கூற, ஐயா தயவு செய்து அடுத்த முறை வரும்போது என் வீட்டிற்கு வாங்க என்று வேடன் கூறினார்.
திருச்சூரில் டவுன்ல இருக்கீங்களா? என்று திருமாவளவன் கேட்க, டவுனில் இருந்து 8 கிலோ மீட்டர் தான். நீங்கள் நல்லா ஆரோக்கியமா இருப்பீங்க என்று வேடன் கூறினார்.
இதையடுத்து, வாழ்த்துகள் தம்பி. நல்லா இருக்கு... புரட்சிகரமா இருக்கு... உங்கள் பாடலில் நீங்கள் சொல்லப்படக்கூடிய கருத்து புரட்சிகரமா இருக்கு. நாங்க 35 வருஷமா பேசுறத நீங்க 2 நிமிட பாடலில் சொல்லி இருக்கீங்க என்று திருமாளவன் கூறினார்.
இதற்கு, நீங்க பேசறதினால தான் பாடுவதற்கான தைரியம் கிடைக்குது என்று வேடன் கூறினார்.
நீங்கள் உலகளாவிய பிரச்சனை குறித்து ஒரு பாடல் பாடினீங்க.. அது ரொம்ப அருமையா இருந்தது. நான் பலமுறை கேட்டேன். குறுகிய காலத்தில் தான் சமூக வலைத்தளத்தில் பிரபலமானீர்கள் இல்ல? என்று திருமாவளவன் கேட்க... ஆமாம்ஜி என்று வேடன் கூறினார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. இவரே பின்னணியில் வேடன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.






