என் மலர்
நீங்கள் தேடியது "Rail Stir protest"
திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூரின் பிரதான தொழிலான பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருள் நூல். நூலின் விலை கடந்த 20 மாதங்களாகவே உயர்ந்தவாறே உள்ளது. தொழில்துறையினரின் பலகட்ட கோரிக்கைகளுக்கு பிறகு நூலின் இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பிறகும் நூலின் விலை குறையாமல் உயர்ந்தது. இந்நிலையில் நூல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி தொழில்துறை சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் இன்று நூல் விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. சார்பில் திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில் எஸ்.டி.பி.ஐ.கட்சியை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோர் நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ரெயில் நிலைய நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி உள்ளே நுழைந்து ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் , பஞ்சு பதுக்கலை கண்டறிந்து தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அனுமதி இல்லாமல் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.






