என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukkottai jewelry robbery"

    புதுக்கோட்டை அருகே நகை வியாபாரியை காரில் கட்டி போட்டு விட்டு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். #Robberycase

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 40), பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 9-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வியாபாரத்திற்கு வந்த அவர், கே.புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் இருந்து 92 பவுன் பழைய நகைகளை வாங்கினார். மேலும் பழைய நகைகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.1லட்சத்து 82 ஆயிரம் பணம் அவருக்கு கிடைத்தது.

    வியாபாரம் முடிந்ததும் அன்று இரவு காரைக்குடிக்கு காரில் புறப்பட்டார். புதுக்கோட்டை கே.புதுப்பட்டி அருகே பாம்பாற்று பாலம் பகுதியில் செல்லும் போது திடீரென 9பேர் கொண்ட கும்பல் , விக்னேஷின் காரை வழிமறித்ததோடு, அவரது கை, கால்களை கட்டி போட்டி விட்டு, அவர் வைத்திருந்த 92 பவுன் நகை மற்றும் ரூ.1.82லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும்.

    இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க பொன்னமராவதி டி.எஸ்.பி. தமிழ்மாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் இன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை, காரைக்குடி பகுதியை சேர்ந்த சத்தியராஜ், மாரிமுத்து, சதீஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 32 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால் இந்த சம்பவத்தில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. #Robberycase

    ×