search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukkottai Bus Stand"

    • எனது விண்ணப்பத்தை வேண்டுமென்றே நிராகரித்து வேறு புதிய நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கி உள்ளனர்.
    • தகுதி இல்லாத நிறுவனத்திற்கு பஸ் நிலைய கட்டுமான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது சட்டவிரோதம்.

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தனியார் நிறுவனம் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்கள், சாலைகள் அமைக்கும் பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகின்றோம். இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகளுக்காக 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்ட கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு (டெண்டர்) அறிவிப்பானை வெளியிட்டது.

    இந்த டெண்டருக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பித்திருந்த நிலையில் சில காரணங்களுக்காக டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 24-ந்தேதி டெண்டர் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப ஏல மதிப்பீடு பட்டியல் வெளியிடப்பட்டதில் எனது விண்ணப்பத்தில் நான் கையொப்பமிடாத காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

    ஆனால் நேரடி டெண்டர் ஆவணங்களின் அனைத்து பக்கங்களிலும் நான் கையொப்பமிட்டு இருந்தேன். அது கருத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை. எனது விண்ணப்பத்தை வேண்டுமென்றே நிராகரித்து வேறு புதிய நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கி உள்ளனர்.

    சம்மந்தப்பட்ட நிறுவனம் இதுவரை தனியார் பணிகளையே செய்துள்ளனர். தகுதி இல்லாத இந்த நிறுவனத்திற்கு பஸ் நிலைய கட்டுமான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது சட்டவிரோதம். எனவே டெண்டர் அறிவிப்புக்கு தடை விதித்து புதிய டெண்டர் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், புதுக்கோட்டை பஸ் நிலையம் கட்டுமான பணிகளுக்கு நடத்தப்பட்ட டெண்டருக்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வழக்கில் நகராட்சித் துறை நிர்வாக இயக்குனர், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஆகியோர் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    ×