search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puducherry nomination mla"

    பா.ஜனதாவை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் புதுவை காங்கிரசார் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி நாராயணசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்றது.

    புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்துக் கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் பதவி ஏற்று ஒரு ஆண்டாகியும் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்படவில்லை. அதற்கான எந்த முயற்சிகளும் நடக்கவில்லை.

    இந்த நிலையில் பாரதீய ஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசே நேரடியாக நியமித்தது. கவர்னர் கிரண்பேடியின் சிபாரிசின் பேரில் தான் 3 பேரும் நியமிக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் கவர்னர் கிரண்பேடி நான் அவர்களை சிபாரிசு செய்யவில்லை. மத்திய அரசே நேரடியாக நியமித்திருக்கிறது என்று கூறினார்.

    புதுவையில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருக்கும்போது, பாரதீய ஜனதா கட்சியினரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்ததால் புதுவை காங்கிரசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    முதலிலேயே புதுவை அரசு நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என்று கட்சியிலேயே பலர் விமர்சித்தனர்.

    அதன்பிறகு எம்.எல்.ஏ.க் கள் நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதிலாவது தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று காங்கிரசார் எதிர்பார்த்தனர். ஆனால் நியமனம் செல்லும் என்று ஐகோர்ட்டு கூறிவிட்டது.

    இது காங்கிரசாருக்கு அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழக்கு சென்றது.

    இதற்கிடையே சபாநாயகர் நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க தொடர்ந்து மறுத்து வந்தார். இதனால் காங்கிரசார் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் 3 எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    ஏற்கனவே ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியபோதுகூட எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல சுப்ரீம் கோர்ட்டு கருத்தையும் மீறி 3 பேரையும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என்றே காங்ரசார் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று சட்டசபை கூட்டத்துக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதித்து விட்டனர். இது புதுவை காங்கிரசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாரதீய ஜனதா வென்றுவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள்.

    இது காங்கிரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு என்றும் நினைக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் கண்டுகொள்ளவே இல்லை. குறைந்தபட்சம் பாராளுமன்றத்தில் கூட இதுபற்றி யாருமே பேச வில்லை.

    டெல்லியில் போராட்டம் எதையும் நடத்தவும் இல்லை. இதுவும் காங்கிரசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

    புதுவையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வாரிய தலைவர்களை நியமிப்பது வழக்கம். அதில் கட்சி நிர்வாகிகளுக்கும் வாரிய தலைவர் பதவி வழங்கப்படும். தற்போது ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு கடந்துவிட்ட நிலையிலும் கட்சி நிர்வாகிகள் யாருக்கும் வாரிய தலைவர் பதவி வழங்கவில்லை. அதற்கான முயற்சிகளும் நடப்பதாக தெரியவில்லை. இதுவும் காங்கிரஸ் நிர்வாகிகளை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.

    ×