என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Project report for road construction"

    • 6.5 கிலோமீட்டர் தொலைவுக்கு, 3 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்க திட்டம்
    • விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தகவல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்தில் பீஞ்சமந்தை, ஜாத்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்கள் உள்ளது.

    சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த பகுதிக்கு சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். யாருக்கேனும் திடீரென உடல்நிலை சரியில்லாத போது மலைவாசிகள் டோலி கட்டி, அதில் நோயாளியை படுக்க வைத்து தோல் மீது சுமந்தபடியே ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர்.

    குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம். குறிப்பாக கர்ப்பிணி பெண்களை மருத்து வமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத போது இறப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

    இந்த நிலையில் அணைக்கட்டு அடுத்த அத்திமரத்து கொல்லை மலை கிராமத்தைச் சேர்ந்த விஜி - பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்கா.

    இவர் கடந்த 27-ந் தேதி இரவு வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையை திடீரென பாம்பு கடித்து விட்டது.

    பெற்றோர், குழந்தை தனுஷ்காவை தோல் மீது சுமந்தபடி நடந்தே அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பிரேதபரிசோதனை முடிந்த குழந்தையின் உடல் அவசர ஊர்த்தி மூலம் எடுத்து வரப்பட்டது. மலைக்கு செல்லும் பாதை கரடு, மூரடாக இருப்பதால் குழந்தையின் உடல் பாதியில் இறக்கிவிடப்பட்டது.

    இதனையடுத்து தாய் பிரியா, குழந்தை தனுஷ்காவின் உடலை 10 கிலோமீட்டர் தூரம் கையால் தூக்கி மலை கிராமத்துக்கு நடந்து சென்றார்.

    இந்த சம்பவம் எதிரொலியாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் மலை கிராமத்தை ஆய்வு செய்து சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி நேற்று முன்தினம் சாலை அமைக்க அளவீடு செய்யும் பணி நடந்தது.

    இதில் முதல் கட்டமாக வரதலம்பட்டு மலையடிவாரம் முதல் அல்லேரி மலை கிராமம் வரை 6.5 கிலோமீட்டர் தொலைவுக்கு, 3 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.5.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி கேட்டு அரசுக்கு அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கான அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×