என் மலர்
நீங்கள் தேடியது "private tournament"
- பஹ்ரைனின் தேசிய தினத்தன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்காக ராஜ்புத் பங்கேற்றார்.
- இது ஒரு தவறான புரிதல்
பஹ்ரைனில் தனியார் போட்டியில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை காலவரையின்றி தடைசெய்து பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் பஹ்ரைனின் தேசிய தினத்தன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்காக ராஜ்புத் பங்கேற்றார். இந்தியாவிற்காக அவர் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், PKF இந்த தடையை விதித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பின் அவசர பொதுக்குழு கூட்டத்தில், அவர் சம்மேளனத்தின் மூன்று வெவ்வேறு விதிகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டது. பஹ்ரைனில் நடந்த GCC கோப்பை போட்டியில், அவர் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடியதுடன், வெற்றிக்குப் பிறகு இந்தியத் தேசியக் கொடியைத் தன் தோளில் சுற்றியபடி காணப்பட்டதை கூட்டமைப்பு தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளதாக அதன் செயலாளர் ராணா சர்வார் தெரிவித்துள்ளார்.

என்ஓசி பெறாமல் போட்டிகளில் பங்கேற்றதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதை எதிர்த்து ஒழுங்குமுறைக் குழுவின் முன் மேல்முறையீடு செய்ய அவருக்கு உரிமை உள்ளது எனவும் ராணா சர்மா தெரிவித்தார். ஆனால் தான் விளையாடப் போகும் அணி இந்திய அணி என்பது தனக்குத் தெரியாது என்றும், இது ஒரு தவறான புரிதல் என்றும் உபைதுல்லா ராஜ்புத் கூறியுள்ளார்.
"கடைசிவரை அவர்கள் அணிக்கு இந்திய அணியின் பெயர் சூட்டியது எனக்குத் தெரியாது, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெயர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் ஏற்பாட்டாளர்களிடம் கூறினேன். கடந்த காலங்களில் தனியார் போட்டிகளில், இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரு தனியார் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர், ஆனால் ஒருபோதும் இந்தியா அல்லது பாகிஸ்தான் என்ற பெயரில் விளையாடியதில்லை" என தெரிவித்துள்ளார்.






