என் மலர்
நீங்கள் தேடியது "Pongal greeting card"
- நீலகிரி கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
- 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் தூனேரி ஊராட்சிக்கு உட்பட்ட அணிக்கொரை கிராம சமுதாயக்கூடத்தில், சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட பொங்கல் வாழ்த்து மடல் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கி, பிற குழுக்களுக்கு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
தமிழர்களின் மரபு, பண்பாடு, கலாச்சார வழியில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழா நடத்தப்படுகிறது.
இதில் கலைநிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அணிக்கொரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், பழங்குடியினர் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், ஒரு சுய உதவிக்குழுவுக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.15 லட்சத்திற்கான காசோலை, சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளை கலெக்டர் வழங்கினார்.சிறப்பாக போடப்பட்டிருந்த ரங்கோலி கோலத்தினை பார்வையிட்டு சுய உதவிக்குழு உறுப்பி னர்களை பாராட்டினார்.
தூனேரி ஊராட்சி அணிக்கொரை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விழாவில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், தூனேரி ஊராட்சி தலைவர் உமாவதி, தாசில்தார் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், விஜயா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






