search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police search"

    • தடுப்பு பிரிவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அக்காள்மடம் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பனங்காடுகளில் சோதனை நடத்தினர்.
    • வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டுகள் கிடைத்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சி பகுதிக்குட்பட்ட அக்காள்மடம் வடக்கு கடற்கரை பகுதியில் பனங்காடுகள் மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அக்காள்மடம் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பனங்காடுகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது வெடிகுண்டுகளை தேடி கண்டுபிடிக்கும் டிடெக்டர் கருவி மூலம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 1 அடி ஆழத்தில் குழிகளை தோண்டி வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் சோதனை செய்தனர்.

    இதுபற்றி தகவல் வெளியானதும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதன் காரணமாக நேற்று மாலை 3 மணியுடன் போலீசார் தங்கள் சோதனைகளை முடித்து கொண்டு புறப்பட்டு சென்றனர். இன்று 2-வது நாளாக மீண்டும் சோதனை நடத்திய இடங்களில் போலீசார் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதா? என்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, இலங்கையில் கடந்த 2006-ம் ஆண்டில் ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது இலங்கையில் இருந்து ராமேசுவரம் வந்த விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த சிலர் பாம்பன் தங்கச்சிமடம் வடக்கு கடற்கரை பகுதிகளில் வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை புதைத்து விட்டு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சோதனை நடத்தி வருகிறோம். இதுவரை வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டுகள் கிடைத்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் வசித்த வீட்டின் அருகில் இருந்து ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது மட்டுமின்றி அந்த பகுதியில் சமூக விரோதிகள் மற்றும் கடத்தல் காரர்கள் போதை பொருட்களும் பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ×