search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perambalur student molested"

    பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் 9-வது வார்டுக்குட்பட்ட துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் எழிலரசன் (வயது 28), கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி பெரம்பலூரை சேர்ந்த 16 வயதான பிளஸ்-2 படித்து கொண்டிருந்த மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    பின்னர் 17-ந்தேதி அந்த மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த எழிலரசன், அந்த மாணவியை மீண்டும் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த மாணவிக்கும், இதனைத் தட்டிக்கேட்ட அவரது தாய், தங்கைக்கும் கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

    இதுகுறித்து அந்த மாணவியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசனை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த வழக்கை நேற்று மாலை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக எழிலரசனுக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும், அபராதம் தொகை செலுத்த தவறினால் மேலும் 4½ ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு வழங்கினார்.

    நீதிபதி விஜயகாந்த் அளித்த தீர்ப்பின் விவரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிக்காக வாதாடிய அரசு தரப்பு வக்கீல் சித்ரா கூறுகையில், எழிலரசன் வலுக்கட்டாயமாக மாணவியை பலாத்காரம் செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அந்த அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனு பவிக்க வேண்டும்.

    அத்துமீறி மாணவியின் வீட்டில் எழிலரசன் நுழைந்ததற்காக 3 ஆண்டுகளும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டும் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததால் 1 ஆண்டும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.

    இந்த 14 ஆண்டு சிறை தண்டனையை எழிலரசன் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததாக கூறினார். இதையடுத்து எழிலரசனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    ×