search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parents fear"

    • கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • பெற்றோர்கள் பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் தங்களது பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை பெற்று வேறு பள்ளிகளில் சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராமத்தில் காட்டுக்கொட்டகை பகுதியில் சுமார் 52 ஆண்டுகள் பழமையான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை தச்சூர், பொற்படாக்குறிச்சி, ஏமப்பேர் காலனி, இந்திலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 224 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த பள்ளி வளாகத்தில் 5 வகுப்பறை கட்டிடங்கள் இருந்தன. இதில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த 2 வகுப்பறை கட்டடங்கள் கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது. மீதமுள்ள 3 வகுப்பறை கட்டிடங்களில் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும், 6-ஆம் வகுப்பு மற்றும் தலைமை ஆசிரியர் அறை ஒரு கட்டத்திலும், 7- ஆம் வகுப்பு ஒரு கட்டிடத்திலும் நடைபெறுகிறது. 8-ஆம் வகுப்பு பள்ளியின் முன் உள்ள வராண்டாவில் நடைபெறும் அவல நிலை உள்ளது.

    மேலும் இந்த 3 கட்டிடங்களில் 2க ட்டிடங்கள் தற்போது ஓடுகள் சேதமடைந்து மழை பெய்தால் ஒழுகும் நிலை உள்ளது. இவ்வாறு கட்டிடங்கள் வசதியில்லாமல் ஒரே அறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மூன்று ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமடைந்துள்ளதாகவும் மேலும் சில பெற்றோர்கள் பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் தங்களது பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை பெற்று வேறு பள்ளிகளில் சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது.எனவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கட்டிட வசதி இன்றி மாற்று பள்ளிக்குச் செல்வதை தடுக்கும் விதமாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×