search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panjumittai Review"

    மாகாபா ஆனந்த், செண்ட்ராயன், நிகிலா விமல் நடிப்பில் மோகன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பஞ்சுமிட்டாய்’ படத்தின் விமர்சனம். #Panjumittai #PanjumittaiReview
    ஊரில் மாகாபா ஆனந்தும், செண்ட்ராயனும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். மாகாபா ஆனந்திற்கு அதே ஊரில் இருக்கும் நிகிலா விமலுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு மனைவி நிகிலாவை சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார். போகும் போது செண்ட்ராயனுக்கு சொல்லாமல் சென்று விடுகிறார்.

    மாகாபா ஆனந்த் எங்கு இருக்கிறார் என்று தெரிந்துக் கொண்டு, செண்ட்ராயனும் சென்னைக்கு வருகிறார். மாகாபா ஆனந்தின் மனைவி நிகிலாவிற்கு மஞ்சள் கலர் என்றால் மிகவும் பிடிக்கும். இதை மாகாபா ஆனந்திடம் சொல்லுகிறார். ஆனால், இவர்களை சந்திக்க செண்ட்ராயன் மஞ்சள் கலரில் துணி அணிந்துக் கொண்டு அவர்கள் வீட்டு வருகிறார்.

    இதைப்பார்த்து மாகாபா ஆனந்த் கடுப்பாகிறார். இவர்கள் வீட்டிலேயே தங்க செண்ட்ராயன் முயற்சிக்கிறார். ஆனால், மாகாபா அவரை வெளியே அனுப்பி விடுகிறார். பின்னர், தன் மனைவி மஞ்சள் கலர் பிடிக்கும் என்று என்னிடம் தான் சொன்னார். அவனுக்கு எப்படி தெரிந்தது என்று குழப்பமடைகிறார். மனைவி மீது சந்தேகப்பட்டு சண்டை போடுகிறார்.



    இதனால் சில நாட்கள் மனைவியை பிரிகிறார். பின்னர், சமாதானம் ஆகி, எனக்கு மஞ்சள் கலர் இனிமேல் பிடிக்காது. புளு கலர்தான் பிடிக்கும் என்று மாகாபாவிடம் கூறுகிறார். மறுநாள் செண்டராயன் புளு கலரில் துணி அணிந்து வருகிறார்.

    இந்த விஷயம், செண்ட்ராயனுக்கு மீண்டும் எப்படி தெரிந்தது என்று இவர்களுக்கு சண்டை ஏற்படுகிறது. இனிமேல் எனக்கு கலரே பிடிக்காது என்று நிகிலா சொல்ல, கலரே இல்லாமல் வெள்ளை கலரை செண்ட்ராயன் அணிந்து வருகிறார். இதனால் மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை எழுகிறது. 

    இதன் காரணமாக மாகாபா ஆனந்திற்கும், செண்ட்ராயனுக்கும் நட்பு முறிகிறது. இதன் பின், சில நாட்களில் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் செண்ட்ராயன். 



    இறுதியில் செண்ட்ராயன் மனநலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? மாகாபா ஆனந்தும், நிகிலாவும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்களா? பிரிந்த நட்பு ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மாகாபா ஆனந்த், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்பா, மனைவியா என்று குழப்பத்திலும், கோபத்திலும், என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பவராக நடித்திருக்கிறார். செண்ட்ராயனின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. கலராக வருவதும் சரி, பிற்பாதில் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் சரி நடிப்பால் மனதை கவர்ந்திருக்கிறார். 

    நாயகியாக வரும் நிகிலா விமல் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். எப்போ பார்த்தாலும் சாப்பிட்டுக்கிட்டு, வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனநல மருத்துவராக வரும் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் மிளிர்கிறார்.



    குறும்படமாக வெளியான இந்த கதையை, தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன். படத்தின் கடைசி 20 நிமிடம் தவிர படத்தை மற்ற காட்சிகளை அதிகமாக ரசிக்க முடியவில்லை. சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லியிருக்கலாம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். 

    இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும் படத்திற்கு பக்க பலமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசையை ரசிக்க வைத்திருக்கிறார். மகேஷ் கே தேவ்வின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓரளவு கைக்கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பஞ்சுமிட்டாய்’ சுவை குறைவு.
    ×