search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palayamkottai private school fire accident"

    பாளையில் இன்று மதியம் தனியார் பள்ளியில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்.
    நெல்லை:

    பாளை நகரின் மையப் பகுதியில் ரோஸ்மேரி மெட்ரிகுலேசேன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகருகே 3 கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதியில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை உள்ள மாணவ - மாணவிகளுக்கும், மற்றொரு பிரிவில் 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ - மாணவிகளுக்கும் வகுப்பறைகள் உள்ளன.

    இதில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளின் கட்டிடத்தில் சில வகுப்பறைகளில் பழைய புத்தகம், ரிக்கார்டுகள், பழைய பேப்பர் வைத்து குடோனாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் மின்கசிவு காரணமாக அந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ கொளுந்து விட்டு எரிந்து கட்டிடத்தின் ஜன்னல் வழியாக வெளியே பரவியது. இதையடுத்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆசிரியர்கள் உடனடியாக துரிதமாக செயல்பட்டு குடோனின் அருகில் உள்ள 5 மற்றும் 6-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளை உடனடியாக மீட்டு அழைத்து சென்றனர். பின்னர் முதல் தளத்தில் உள்ள 3 மற்றும் 4-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளையும், இதைத்தொடர்ந்து தரைத் தளத்தில் உள்ள 1 மற்றும் 2-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளையும் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து சென்றனர். மேலும் மாணவர்களின் பேக் உள்ளிட்ட பொருட்களையும் பள்ளி ஊழியர்கள் மீட்டு சென்றனர்.

    பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காற்று பலமாக வீசியதாலும், அங்கு பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டதாலும் தீ மளமளவென கொளுந்து விட்டு எரியதொடங்கியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீ மற்ற பகுதிக்கு பரவாமல் தடுத்தனர்.


    பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பள்ளி அருகே உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தகவல் அறிந்து தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். மற்ற குழந்தைகளை மற்றொரு கட்டிடத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து தகவல்அறிந்த மாவட்ட கலெக்டர் ஷில்பா உடனடியாக அந்த பள்ளிக்கு விரைந்து சென்று தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.
    ×