என் மலர்
நீங்கள் தேடியது "pakistan votes"
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் குண்டுவெடிப்பு, வன்முறை பரபரப்புகளுக்கு இடையே வாக்குப்பதிவு 6 மணியளவில் முடிந்தது. #PakistanElections2018
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பாராளுமன்ற தேசிய சபையில் உள்ள 270 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மேலும், மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடந்தது. அரசியல் பரபரப்பு, ராணுவ ஆட்சி அச்சுறுத்தல், பயங்கரவாதிகளின் தாக்குதல் என பல நிகழ்வுகளுக்கு இடையே இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
பாராளுமன்ற இடங்களுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓட்டுப் பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்பு பணியில் 4 லட்சம் போலீசாரும், 3,71,000 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்ட நிலையிலும், குவெட்டா பகுதியில் வாக்குசாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 31 பேர் பலியாகினர். மேலும், சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. 24 மணிநேரத்துக்குள் முழு வெற்றி நிலவரமும் தெரிய வரும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளிடையே நேரடி போட்டி உள்ளது.






