search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Otteri Lake"

    5 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டேரி ஏரி நிரம்பியது. பொதுமக்கள் பூஜைகள் செய்து வரவேற்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக நகரை ஒட்டி பாலமதி, பள்ள இடையம்பட்டி, நாயக்கனேரி மலைகளில் இருந்து மழைக்காலங்களில் வழிந்தோடி வரும் மழைநீரை சேகரித்து ஆண்டு முழுவதும் குடிநீர் வினியோகிக்கும் வகையில் ஏறத்தாழ 106 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஏரியை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் உருவாக்கியது. அதுதான் தற்போதுள்ள ஓட்டேரி ஏரி.

    நாயக்கனேரி மலையில் இருந்து ஊற்றுத்தண்ணீர் பெருக்கெடுத்து குளவிமேடு, வாணியங்குளம் கிராமம் அருகே செல்லும் நீரோடை வழியாக வந்து இந்த ஏரியில் சேருகிறது.

    ஓட்டேரி ஏரி நிரம்பியதும் உபரிநீர் பலவன்சாத்துக்குப்பம் ஏரிக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து தொரப்பாடி ஏரிக்கு செல்லும். இவ்வாறு செல்லும் இணைப்பு கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இத்தகைய நீர்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேற்றும் கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்ட ஓட்டேரி ஏரி கடந்த 2015-ம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது கடைசியாக முழுமையாக நிரம்பி வழிந்தது. அதன் பிறகு 5 முறை வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்த போதும் ஓட்டேரி ஏரி வறண்டே காணப்பட்டது.

    தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை ஏரி நிரம்பி, ஒரு பகுதியில் கோடிப்போக தொடங்கியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் அப்பகுதி பொதுமக்கள் நேற்று சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்றனர். சிலர் வருணபகவானை வழிபட்டனர்.

    சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து ஏரியை பார்த்துச் செல்கின்றனர். சிலர் செல்போனில் செல்பி எடுத்தும், இளைஞர்கள் பலர் ஏரியில் குளித்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×