search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Odisha Honey Trap"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பியூட்டி பார்லரில் அர்ச்சனா வேலைபார்த்தபோது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக தகவல்
    • அர்ச்சனாவின் வலையில் சிக்கிய ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் முயற்சி நடந்து வருவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அர்ச்சனா நாக் என்ற 26 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா நாக், இப்போது சொகுசு கார்கள், நான்கு உயர் இன நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு ஆடம்பரமான அரண்மனை வீட்டை வைத்திருக்கிறார்.

    ஒடிசா திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஒரு பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அர்ச்சனா குறித்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

    ஆரம்பகாலத்தில் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்த அர்ச்சனா, பின்னர் பியூட்டி பார்லரில் சேர்ந்ததாகவும் அங்கு ஜெகபந்து சந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்ததாகவும், பியூட்டி பார்லரில் வேலைபார்த்தபோது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அர்ச்சனாவின் கணவர் ஜெகபந்து, பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் ஷோரூம் நடத்தி வந்தார். இதனால் அரசியல்வாதிகள், பில்டர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்ற பணம் படைத்தவர்களை அவர் நன்கு அறிந்திருந்தார். இதன்மூலம் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் அர்ச்சனா நட்பாக பழகியதுடன், அவர்களுக்கு பெண்களை சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை எடுத்து, பணம் கேட்டு மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.


    அர்ச்சனாவின் வலையில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதா தளம் (பி.ஜே.டி) கட்சித் தலைவர்கள் சிக்கியிருக்கலாம் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பிஜேடி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் அர்ச்சனாவுக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டால் ஒடிசாவில் 22 ஆண்டுகால நவீன் பட்நாயக் ஆட்சி கவிழ்வதற்கு வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்எஸ் சலுஜா கூறி உள்ளார்.

    இதற்கு முன்பு வேறு சில வழக்குகளில் செய்தது போன்று, அர்ச்சனாவின் வலையில் சிக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் இளைஞரணி தலைவர்களை பாதுகாக்கும் முயற்சி நடந்து வருவதாகவும் சலுஜா குற்றம் சாட்டினார்.

    18 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்கள் அர்ச்சனாவின் நெட்வொர்க்கில் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பிஜேடி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், பாஜக புவனேஸ்வர் பிரிவுத் தலைவர் பாபு சிங் கூறியிருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிஜேடி மறுத்துள்ளது. தங்கள் தலைவர்களுக்கு தொடர்பு இருந்தால் அதுபற்றிய ஆதாரங்களை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விவகாரம் ஒடிசா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×