search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nature's fury"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 16 நாட்கள் கடந்தும் 41 பேர் இன்னமும் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கியுள்ளனர்
    • வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸிற்கு கீழே குறைந்துள்ளது

    மலைமாநிலம் என அழைக்கப்படும் வட இந்திய மாநிலம், உத்தரகாண்ட் (Uttarakhand).

    இங்குள்ள உத்தரகாசி (Uttarkashi) மாவட்டத்தில் நவயுகா எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி எனும் நிறுவனம் சார்பில் மழை, வெயில், பனி, மலைச்சரிவு என அனைத்துவிதமான பருவகால நிலைகளிலும் பயணம் தடைபடாமல் மக்கள் பயணிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்படும் பணிகள் நடந்து வந்தன.

    அவ்வாறு அமைக்கப்பட்டு வந்த ஒரு நீண்ட சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது. எண் 134 தேசிய நெடுஞ்சாலையின் (NH-134) கடைசியில் யமுனோத்ரிக்கு அருகே இப்பகுதி உள்ளது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இந்த சில்க்யாரா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் சுரங்கத்தின் உள்ளே பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

    இதையடுத்து போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கத்தால் அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இயந்திர கோளாறினால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக இயந்திர உதவி இல்லாமல், ஆட்களை கொண்டு துளையிட்டு மீட்கும் முயற்சி துவங்கியது.

    பணியாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி கிட்டத்தட்ட 16 நாட்கள் கடந்து விட்டது. 360 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளே இருக்கின்ற 41 பணியாளர்களையும் மீட்கும் பணி நீண்டு கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், அங்கு மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அங்கு ஏற்பட்டிருக்கும் பனிப்பொழிவின் காரணமாக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸிற்கும் கீழே குறைந்துள்ளது.

    இடி, மின்னல், மழை, பனிப்பொழிவு, குளிர் என எதிர்மறை வானிலை சூழல் காரணமாக மீட்பு பணி இன்னும் தொய்வடையலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், அச்சத்தை போக்கும் வகையில், "மீட்பு பணியாளர்கள் எத்தகைய சூழலையும் கையாளும் விதத்தில் பயிற்சியும் அனுபவமும் கொண்டவர்கள்" என இந்த பணிகளை முன்னெடுத்துள்ள தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சி கார்ப்பரேஷனின் (NHIDCL) நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அஹ்மத் தெரிவித்தார்.

    நாட்கள் செல்ல செல்ல அவர்கள் உடல்நிலை மோசமடையலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    முதலில் இயந்திர கோளாறினால் தொய்வடைந்த மீட்பு பணி, இயற்கை சீற்றங்களால் மேலும் நீண்டு கொண்டே செல்வது இந்திய மக்களை கவலையடைய செய்துள்ளது.

    ×