search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Intelligence officers"

    ‘வாட்ஸ்-அப்’ மூலம் இயங்கிய கும்பலை சேர்ந்த 4 பேர் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று அதிகாலையில் அதிரடியாக நுழைந்து தீவிர சோதனை நடத்தினார்கள்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ரகசிய கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த 10 பேர் கொண்ட கும்பலை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்தனர். “வீரமரணம் எங்கள் இலக்கு” என்று குறிப்பிட்டு அவர்கள் ‘வாட்ஸ்-அப்’ குழு அமைத்து செயல்பட்டு வந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. அவர்களில் சிலர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலையாகி வெளியில் வந்தனர்.

    இந்தநிலையில் அந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அந்த அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ‘வாட்ஸ்-அப்’ கும்பல் குறித்த விவரங்களின் அடிப்படையில் அவர்கள் கூட்டம் நடத்திய விவரங்கள், சென்று வந்த இடங்கள், பின்னணி, சந்தித்த நபர்கள், சமூக வலைதளங்களில் வெளிவந்த தகவல்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதாவது கீழக்கரையில் ஒருவரும், தேவிபட்டினம் பகுதியில் 3 பேரும் சம்பந்தப்பட்டிருப்பதால் தேசிய புலனாய்வு தனிப்படையினர் அந்த 4 பேரின் வீடுகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தேசிய புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படையினர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 35 போலீசாரின் உதவியுடன் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    நேற்று அதிகாலை 3 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை பல மணி நேரம் நீடித்தது. இந்த சோதனையின் போது ‘வாட்ஸ்-அப்’ குழு தொடர்பான வழக்கில் சிக்கியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடந்ததாக தெரிகிறது. இந்த சோதனையில் சில ஆவணங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.பயங்கரவாத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பில் உள்ளார்களா, அதுதொடர்பான தகவல் பரிமாற்றம் ஏதும் நடந்துள்ளதா? என்ற கண்ணோட்டத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை போல், வாட்ஸ்-அப் குழு வழக்கில் தொடர்புடைய மற்ற 6 பேர் வீடுகளிலும் அந்தந்த பகுதி போலீசார் ஒத்துழைப்புடன் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
    ×