search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national flag issue"

    • தேசியக் கொடிக்காக ஏழை மக்களிடம் ரூ.20 கேட்பது வெட்கக்கேடானது என ராகுல் கண்டனம்.
    • ரேஷன் கடை விற்பனையாளர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.

    சண்டிகர்:

    நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம் வரும் 15ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், வீடு தோறும் தேசியக் கொடி ஏற்றும் 'ஹர் கர் திரங்கா' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக அஞ்சல் அலுவகங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹெம்டா கிராமத்தில் ஒரு ரேஷன் கடையில் 20 ரூபாய் கொடுத்து தேசியக் கொடி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ஏழை மக்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து செய்தி இணையதளம் வெளியிட்ட பதிவில், தேசியக் கொடியை வாங்கா விட்டால் ரேஷன் பொருட்கள் மறுக்கப் படுவதாகவும் பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டினர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் இணையத்தில் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், அந்த ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. 


    வாங்கத் தயாராக உள்ளவர்களுக்கு மட்டுமே 20 ரூபாய்க்கு ரேஷன் கடைகள் மூலம் தேசிய கொடி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்னால் துணை ஆணையர் அனிஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஏழை மக்களிடம் தேசியக் கொடிக்காக ரூ.20 கேட்டு கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 


    தேசியத்தை ஒருபோதும் விற்க முடியாது. ரேஷன் பொருட்கள் கொடுக்கும்போது, ஏழை மக்களிடம் மூவர்ணக் கொடிக்காக 20 ரூபாய் வசூலிப்பது வெட்கக்கேடானது. மூவர்ணக்கொடியுடன், பாஜக அரசு நம் நாட்டு ஏழைகளின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்துகிறது என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×