search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narasimha Mandapam"

    • உட்பிரகாரநாத மண்டபத்தில் சப்தஸ்வர தூண்கள் அமைந்துள்ளன.
    • பாதாள ஈஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.

    திருப்பட்டூர் பிரம்மபுரிசுவரர் கோவில் முதலாம் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்டதாகும். கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் 2-ம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

    அதாவது 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இங்கு நாயக்கர்களும் திருப்பணி செய்துள்ளனர்.

    சுமார் 5 ஏக்கர் பரப்பளவி இத்தலம் பிரமாண்டமாக காணப்படுகிறது. இத்திருக்கோவிலின் முன்பு நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது. கொடி மரம், பலி பீடம் தொடர்ந்து நந்தி ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி அளிக்கிறார்.

    அதனைத்தொடர்ந்து உள்ள உட்பிரகாரநாத மண்டபத்தில் சப்தஸ்வர தூண்கள் அமைந்துள்ளன. கருவறையில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். உளிபடாத சிவலிங்க திருமேனி, மேலே தாராபாத்திரம், நாக ஆபரணத்துடன் கூடிய சதுர வடிவில் ஆவுடை கூடிய திருமேனியில் பிரம்மபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார்.

    சுற்றுப்பிரகார மண்டபங்களில் பரிவார ஆலயங்கள் உள்ளன. அதில் தென்புறம் பதஞ்சலி முனிவர் திருவுருவம் உள்ளது. அவர் யோக சூத்திரம் அருளிய பதஞ்சலியாவார்.

    அங்குள்ள தியான மண்டபத்தின் வடபுறம் நோக்கி சப்த கன்னிமார் உள்ளனர். இதில் விநாயகர் மற்றும் வீரபத்திரரும் இடம் பிடித்துள்ளனர்.

    மேல் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கற்பக விநாயகரும், அடுத்த பிரம்மன் வழிபட்ட லிங்கங்களில் ஒன்றான பழமலை நாதரும் உள்ளனர். அடுத்தது கந்தபுரீஸ்வரரும், அடுத்து மயிலில் சிவகுகன் சண்முகநாதரும் உள்ளனர்.

    அடுத்து சுதையால் உருவான கஜலட்சுமி, அதற்கடுத்து சிற்பத்தால் ஆன கஜலட்சுமி அருள்புரிகிறார்கள். வடபுற திருச்சுற்றில் பிரம்மன் வழிபட்ட லிங்கங்களில் ஒன்றான பாதாள ஈஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.

    சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று. திருச்சுற்று முக மண்டபத்தின் வடதிசையில் மேற்கு நோக்கியவாறு கால பைரவர் உள்ளார்.

    அவர் இப்பகுதி மக்களுக்கு நோய் தீர்க்கும் வைத்தியரை போல உதவுகிறார். கிராம மக்களுக்கு எவ்வித நோய் ஏற்பட்டாலும், காலபைரவர் சந்நிதி விபூதி அதை குணப்படுத்தி விடுவதாக இப்பகுதி மக்கள் இன்றும் உறுதியாக நம்புகின்றனர்.

    சூரிய பகவானும் உள்ளனர். கருவறை தேவ கோட்டங்களில் தென் புறம் நர்த்தன கணபதியும், ஞான தட்சிணாமூர்த்தியும், மேல்புறம் மகா விஷ்ணுவும், வடபுறம் துர்க்கையும் அருள்பாலிக்கிறார்கள். முன்மண்டபத்தின் வடகிழக்கில் நவகிரகங்களும், அடுத்து வடகிழக்கு மூலையில் பிரம்மன் வழிபட்ட லிங்கங்களில் ஒன்றான சுத்தரத்தினேஸ்வரரும் உள்ளனர்.

    பிரம்மன் வழிபட்ட சோடச லிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது. வியாக்ரபாதரும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.

    அருள்மிகு பிரம்ம சம்பத்கவுரியின் சன்னதி கொடி மரத்தின் வடபுறம் தனிக்கோவிலாக அமைந்துள்ளது. பிரம்மன் வழிபட்ட அம்பிகை பிரம்மனுடைய சம்பத்தாகிய தேஜசை திரும்ப வழங்கியதால் அழகின் வடிவமாக கருணையே கண்களின் சாட்சியாக பிரம்ம சம்பத் கவுரி அருள்புரிகிறார்.

    அம்மன் சன்னதி வாயிலின் தென்புறம் பிரம்மன் வழிபட்ட லிங்கங்களின் ஒன்றான தாயுமானவர் உள்ளார். அம்மன் கோவிலை தரிசிக்க சுற்றுப்பிரகாரம் உள்ளது. அம்மன் கோவிலுக்கு வடக்கே பிரம்ம தீர்த்தமும், நந்தவனமும் உள்ளது.

    நந்தவனத்தில் பிரம்மன் வழிபட்ட பிற சிவ லிங்கங்கள் எங்கும் ஈஸ்வர மயமாய் மாண்டூக நாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாச் சலேஸ்வரர், சைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தி நாதர், சப்தரிஷீஸ்வரர் வீற்றி ருக்கிறார்கள்.

    அம்பாள் பிரம்ம நாயகியின் சந்நிதி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் தனிக்கோவிலாக அமைந்துள்ளது. அம்பாள் கோவில் அடுத்துள்ள வடக்கு பிரகாரத்தில் கைலாசநாதர் கோவில் கல்தேர் வடிவில் அமைந்துள்ளது. எதிரே ஒரே கல்லால் ஆன பெரிய நந்தி உள்ளது. இந்த கைலாசநாதர் கோவிலை சுற்றி பல சிவலிங்க சந்நிதிகள் உள்ளன.

    இத்தலத்தில் பங்குனி மாதத்தில் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை நிகழ்கிறது. இவ்வாலயத்தில் மற்றொரு சிறப்பும் உள்ளது. கருவறைக்கும், ஆலயத்தின் முகப்பு வாயிலுக்கும் இடையே சுமார் 100 மீட்டர் (அதாவது 300 அடி) இடைவெளி உள்ளது.

    இடையில் 7 நிலைப்படிகள் உள்ளன. இந்த 7 வாசல்களையும் கடந்து இறைவன் கருவறையில் எப்போதும் இயற்கை வெளிச்சம் காணப்படுவது மிக அரிதான காட்சியாகும். எந்த விளக்கொளியும் இல்லாமலேயே சிவலிங்கத்தை பளிச்சென்று தரிசிக்கும் வாய்ப்பு இக்கோவிலில் மட்டுமே உள்ளது என்பது தனிச்சிறப்பு.

    தலையெழுத்தை மாற்றும் சக்தி

    வான சாஸ்திரப்படி நமது பிறப்பின் அடையாள அட்டை யாக கருதப்படுவது தான் ஜாதகம். நாம் பிறந்த நேரம், ஊர், தேதி, ராசி, நட்சத்திரம் உள்ளிட்ட விபரங் களை உள்ளடக்கியது என்றும் கூறலாம். இதன் மூலம் நமது எதிர்கால பலன்களை ஓரளவு முடிவு செய்ய முடியும்.

    குறிப்பாக கல்வி, திருமணம், பொருளாதார நிலை, ஆயுள் உள்ளிட்ட விபரங்களை கால, கிரக சூழ்நிலைக்கு ஏற்ப நடப்பு ஆண்டு கணிப்பு, செவ்வாய் தோஷ பகுப்பாய்வு, ஏழரை சனி, கிரகங்களின் கோச்சார பலன்கள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

    அவ்வாறான ஜாதகத்தை இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மனின் பாதங்களில் வைத்து வழிபட வேண்டும். நம் கொடுக்கும் ஜாதகம் மீது சுவாமிக்கு சாற்றப்பட்ட மஞ்சள் பூசி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் பக்தர்களின் ஜாதகப்படி அவர்களின் தலையெழுத்தும் மாறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    • முக்தி அடைந்த 10 தலங்களில் இத்தலமும் ஒன்று.
    • பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார்.

    ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் தமிழ்நாட்டில் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அவரே ஆதி சேஷன் ஆவார்.

    அவர் முக்தி அடைந்த 10 தலங்கள் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது.

    அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.

    வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார். அதற்கேற்றவாறு இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.

    திருப்பட்டுரிலே காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி கோவிலில் வியாக்ர பாதர் ஜீவசமாதி இருக்கிறது. சிவபெருமான் பேரருளால் வியாக்ரபாதர் காலால் அடித்து கொண்டு வரப்பட்ட கங்கை குளம் இன்றும் புலி கால்களை போல் காட்சி அளிக்கிறது. காசி சென்று கங்கையில் நீராட முடியவில்லையே என்ற குறையை இத்தீர்த்தம் தீர்க்கிறது.

    எல்லாமே மஞ்சள் நிறம்

    பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர்.

    பிரம்மன் வழிபட்ட பழமலை நாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூக நாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாச நாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.

    எனவே இத்தலத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் மஞ்சள் நிறமே காட்சியளிக்கிறது. அது நம்மனதுக்கு மங்களமான மன உணர்வை ஏற்படுத்துகிறது.

    பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம்.

    யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் அதன் மூலம் ஆயுளை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.

    அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது.

    உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிக ளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். அவை பிரம்மனின் அருளால் சுபசெலவுகளாக மாறிவிடும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர் நிலைக்குச் செல்வான். அதற்காக நாம் மனசாட்சி இல்லாமல் கேட்கும் உதவிகளை பிரம்மன் செய்ய மாட்டார்.

    நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை மீறி நியாயமற்றதை நாம் பிரம்மனிடம் கேட்டால் அவர் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.

    நரசிம்மர் மண்டபம்

    நரசிம் மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்கா ததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளன.

    நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதி யுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்த தாகவும் கூறப்படுகிறது.

    வேண்டுதல்-வழிபாடுகள்

    இத்தலம் ஒரு சிவதலமாக இருந்தாலும், இங்குள்ள பிரம்மா சந்நிதி தான் மிகவும் புகழ் பெற்றது. இத்தலம் குரு பரிகாரத்தலமாகும். மூலவருக்கு வடபுறத்தில் தனி சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலை யில் உள்ளார். மேலும் அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் அருள் பாலிக்கிறார் பிரம்மா.

    இந்தியாவிலேயே மிகப்பெரிய பிரம்மா இவர்தான். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியா ழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது.

    மேலும், திங்கட்கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்கு வது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாக பூஜை நடக்கும்.

    குழந்தைகளுக்கான பைரவர் வழிபாடு

    சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர்.

    அர்த்த ஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியை பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

    ×