search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagercoil rain"

    குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவானது.
    நாகர்கோவில்:

    அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவானது.

    நாகர்கோவிலில் சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் வடசேரி, கோட்டார், செட்டிக்குளம், வேப்பமூடு பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    வடசேரி தொடக்கப் பள்ளிக்குள் தண்ணீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் மழை நீர் சூழ்ந்தது. கோட்டார், வடசேரி ஆராட்டு பகுதியில் ரோடுகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடின. மழைநீர் அந்த பகுதிகளில் உள்ள கடைகளுக்குள்ளும் புகுந்தது.

    நாகர்கோவில் நகர் முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது. மழை சற்று குறைந்ததையடுத்து ஆங்காங்கே தேங்கியிருந்த வெள்ளம் வடிய தொடங்கியது. ஆனால் ஒரு சில பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது.

    மழை வெள்ளத்தில் பல்வேறு சாலைகளும் சேதமடைந்துள்ளன. அவ்வை சண்முகம் குண்டும், குழியுமாக மிக மோசமாக காணப்படுகிறது. ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    நேற்றிரவு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே லேசான சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி, சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம், வழுக்கம்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையால் அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயரத் தொடங்கி உள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 26.20 அடியாக இருந்தது. அணைக்கு 814 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 554 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67.90 அடியாக உள்ளது. அணைக்கு 246 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீரிப்பாறை, தடிக்காரன் கோணம், குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தோவாளை செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-54, பெருஞ்சாணி-3, சிற்றாறு-1- 16.2, சிற்றாறு-2-8.6, நாகர்கோவில்-70.2, பூதப்பாண்டி-3.2, சுருளோடு-17, கன்னிமார்-5.2 ஆரல்வாய்மொழி-4, பாலமோர்-16.2, மயி லாடி-16.8, கொட்டாரம்-4.2, ஆணைக் கிடங்கு-4, குருந்தன்கோடு-3.6, முள்ளங்கினாவிளை-2, புத்தன் அணை-3.6.
    ×