search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motton"

    புரட்டாசி மாதத்தில் பெருமாள் பக்தர்கள் விரதம் கடைபிடிப்பதால் கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பனையும், விலையும் குறைந்து உள்ளது. #Purattasi
    சென்னை:

    புரட்டாசி மாதத்தை புனித மாதமாக கருதி வழிபடுகிறார்கள். குறிப்பாக பெருமாள் பக்தர்கள் விரதம் கடைபிடித்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகிறார்கள். இந்த மாதத்தில் மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி போன்றவற்றை தவிர்த்து சைவ உணவு வகைகளையே சாப்பிடுகிறார்கள்.

    இதனால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. விற்பனை இல்லாததால் அவற்றின் விலை குறைந்துள்ளது.

    புரட்டாசி மாதம் தொடங்கிய பிறகு சென்னையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மீன் மொத்த விற்பனை விலை ரூ.1000 முதல் ரூ.2000 வரை குறைந்துவிட்டது.

    இதுபற்றி தென் இந்திய மீனவர்கள் நல சங்க தலைவர் கே.பாரதி கூறுகையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சராசரியாக நாள்தோறும் 150 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதே அளவுக்கு மீன்கள் வரத்து இருந்தாலும் சில்லரை வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வாங்கிச்செல்கின்றார்கள். புரட்டாசி மாதம் என்பதால் விற்பனை குறைந்துவிட்டது’’ என்றார்.

    சில்லரை விற்பனையில், பாறை மீன் கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. தற்போது ரூ.120 ஆக குறைந்துள்ளது. ரூ.300 ஆக இருந்த ஷீலா மீன் ரூ.120 ஆகவும், பெரிய வஞ்ஜிரம் கிலோ ரூ.1000த்தில் இருந்து ரூ.500 ஆகவும், சிறிய வஞ்ஜிரம் ரூ.1000-த்தில் இருந்து ரூ.300 ஆகவும், நெத்திலி மீன் ரூ.200 ஆகவும் விற்றது ரூ.100 ஆகவும் குறைந்துள்ளது.

    சென்னையில் மார்க்கெட்டுகளில் மீன் விற்பனை குறைந்துவிட்டதுபோல் வீடுகளில் நேரடியாக மீன் விற்பனை செய்வதும் குறைந்துவிட்டது.

    இதுபற்றி மீன் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், வழக்கமான விற்பனையில் 50 சதவீதம் குறைந்துவிட்டது. தினமும் 3 கூடை மீன்கள் காசிமேட்டில் இருந்து வாங்கிச் சென்று வீடுகளில் விற்பனை செய்தேன். இப்போது 2 கூடை மீன்கள் கூட விற்பனையாவது இல்லை. விலையை குறைத்து கொடுத்தாலும் வாங்கும் மக்கள் குறைந்துவிட்டார்கள் என்றார்.

    இதேபோல் கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பனையும், விலையும் குறைந்துவிட்டது. ஆட்டுக்கறி சில்லரை விற்பனையாளர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ஓட்டல்களுக்கு வழக்கம் போல் பிராய்லர் சிக்கன் உயிருடன் சப்ளை செய்கிறோம். ஆனால் அவற்றின் விலை 2 வாரத்தில் கிலோவுக்கு ரூ.40 குறைந்துவிட்டது. ரூ.220 ஆக விற்ற பிராய்லர் சிக்கன் ரூ.180 ஆக குறைத்து கொடுக்கிறோம். ஆனால் ஆட்டுக்கறி விலை சிறிதளவே குறைந்து இருக்கிறது. ஆடுகளை இறைச்சிக்காக வெட்டுவது குறைந்து விட்டது. இதனால் அதன் தேவை அதிகரித்து இருப்பதால் விலை குறையவில்லை என்றார்.

    ஆட்டுக்கறி சென்னையில் பல இடங்களில் கிலோ ரூ.600க்கு விற்கப்படுகிறது. ஓட்டல்களில் மீன், சிக்கன், மட்டன் விற்பனை கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது. பிரியாணி கடைகளிலும் விற்பனை குறைந்துவிட்டது. அதே சமயம் சைவ ஓட்டல்களில் விற்பனை அதிகரித்துள்ளது. சாதாரண சைவ ஓட்டல்களில் கூட இருமடங்கு விற்பனை கூடியுள்ளது. #Purattasi

    ×