search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minjur protest"

    மீஞ்சூர் அருகே 400 அடி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி. எந்திரங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தனியார் கப்பல் கட்டும் நிறுவனமும், துறைமுகமும் உள்ளன.

    இங்கு இருந்து சரக்குகளை வெளியே கொண்டு செல்லவும், துறைமுகத்துக்கு வரும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் 400 அடி சாலை, புதிய ரெயில் பாதை ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காட்டுப்பள்ளி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    கிராமத்தின் ஒருபுறம் 400 அடி சாலையும், மற்றொரு புறம் ரெயில் பாதையும் அமைத்தால் இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். மரங்களை வெட்டி வனத்தை அளித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர். முதல்-அமைச்சரின் தனி பிரிவுக்கும் புகார் மனு அனுப்பி இருந்தனர்.

    இந்த நிலையில் சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்குவதற்கு 10-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. எந்திரங்கள் வந்தன. இவற்றை கிராம மக்கள் சிறைப்பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதற்காக அங்கு வந்திருந்த அதிகாரிகளும் திரும்பிச் சென்றனர். சிறிது நேரத்தில் போலீசாருடன் அதிகாரிகள் வந்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஆவேசமாக கூறினார்கள். மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. எனவே சாலை அமைக்கும் பணியை நிறுத்தி விட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

    தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் சம்பத் ஆகியோர் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வருகிற 27-ந்தேதி வரை சாலை பணிகள் நடைபெறாது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
    ×