search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Migrant Labourers"

    • தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள பீகார் அதிகாரிகள் குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறேன்.
    • இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் அவற்றை பீகார் அரசும் சகித்துக்கொள்ளாது.

    பாட்னா :

    வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக வெளியான தவறான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.

    இதையொட்டி பீகார் மாநில துணை முதல்-மந்திரி ஜேதஸ்வி யாதவ், பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக எழுந்த புகார்களை மறுத்து தமிழ்நாடு டி.ஜி.பி. வெளியிட்ட அறிக்கையை நான் சட்டசபையில் வாசித்தேன்.

    நான் இந்த விவகாரத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. எனவேதான், நான் அங்கம் வகிக்கிற அரசு, நேரில் ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்பி உள்ளது. அதன் நோக்கம், களத்தகவல்களை பெறுவதுதான்.

    இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் அவற்றை பீகார் அரசும் சகித்துக்கொள்ளாது. தமிழ்நாடு அரசும் சகித்துக்கொள்ளாது.

    தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள பீகார் அதிகாரிகள் குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமான சம்பவங்களின் அடிப்படையில் பொதுவான அனுமானங்கள் கூடாது.

    எங்களால் செய்ய முடிந்ததை நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் இதில் பீகாரில் எதிர்க்கட்சியாகவும், மத்தியில் ஆளும் கட்சியாகவும் உள்ள பா.ஜ.க.விடம் கேள்விகள் எழுப்ப வேண்டும்.

    இந்த விவகாரம், இரு மாநிலங்கள் தொடர்பானவை என்ற போதிலும் மத்திய அரசு இதுவரையில் அக்கறை காட்டவில்லை.

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர், பீகார் பா.ஜ.க. தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, தங்கள் மாநிலத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான தகவல்களை மறுத்தார் என்பது பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

    பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் தவறான தகவல்களை, ஆத்திரமூட்டும் வார்த்தைகளை டுவிட்டரில் வெளியிட்டது தொடர்பாக வழக்கு பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கெல்லாம் பா.ஜ.க. பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×