என் மலர்
நீங்கள் தேடியது "Mentoring seminar"
- திருப்பத்தூர் கலெக்டர் அறிவுரை
- உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்த உயர் கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கும் கருத்தரங்கம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார். உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது, அரசு சார்பில் நடைபெறும் போட்டித் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். அதற்கு தகுந்த பயிற்சிகளை எடுக்க வேண்டும்.
என்ன படிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு அதை நோக்கி மட்டுமே நம்முடைய கவனம் செல்ல வேண்டும். எந்த ஒரு நடிகரையும் கொண்டாட வேண்டாம்.அவர்கள் பணத்துக்காக சினிமாவில் நடிக்கிறார்கள். பணம் சம்பாதிக்கிறார்கள்.
உங்களுக்காக கஷ்டப்படும் பெற்றோரை கொண்டாடுங்கள். உங்கள் ஆசிரியர்களை கொண்டாடுங்கள்.அது உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். தேர்வில் பெறும் மதிப்பெண்களை கொண்டு எதையும் தீர்மானிக்க முடியாது.
மாணவர்களிடம் நல்ல பழக்கம், ஒழுக்கம், பண்பு, கட்டுப்பாடு, விடாமுயற்சி ஆகியவைதான் முன்னேற்றத்தை கொடுக்கும். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். போதை பழக்கத் துக்கு மாணவ சமுதாயம் ஆளாகக்கூடாது" என்றார்.






