search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "members selection"

    • பள்ளி மேலாண்மைக் குழு மறு சீரமைப்பு கூட்டத்தில் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் சான்றிதழ்களை வழங்கினார்.
    • இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கச்சேரி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு சீரமைப்பு கூட்டத்தில் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் சான்றிதழ்களை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:-

    பள்ளி மேலாண்மைக்குழுவில் பெற்றோர்கள் 15 பேர், தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் 2 பேர் மற்றும் கல்வி தன்னார்வலர் ஒருவர் என மொத்தம் 20 உறுப்பினர்கள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

    கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி பள்ளி மேலாண்மைக்குழுவானது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 200 அரசு நடுநிலைப்பள்ளிகள், 948 அரசு தொடக்கப்பள்ளிகளில் 3 கட்டமாக பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு முடிவடைந்து, தற்போது 4வது கட்டமாக 169 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்யவும், அரசுப்பள்ளிகளை மேம்படுத்தவும் பெற்றோர்களின் பங்களிப்பு அவசியமானது. எனவே பள்ளி மேலாண்மைக்குழுவில் 10 பெண்கள் கட்டாயம் இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

    பள்ளி மேலாண்மைக்குழு, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல், இடைநிற்றலை குறைத்தல், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து முறையாக பள்ளிக்கு வரவழைத்து சேர்த்தல், மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் வளங்களை அதிக அளவில் பயன்படுத்தல், கல்வி வளர்ச்சிக்காக பிற துறைகளை ஒருங்கிணைத்தல், இல்லம் தேடி கல்வி மையங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஆசிரியர் பணி என்பது புனிதமானது. மாணவ, மாணவிகளுக்கு இரண்டாவது பெற்றோர் ஆசிரியர்கள்தான். தங்கள் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து அர்ப்பணிப்புடன் ஆசிரியர்கள் கல்வி சேவையாற்ற வேண்டும்.

    மாணவ, மாணவிகளின் தனித்திறமை, அவர்களின் சூழ்நிலை ஆகியவற்றை அறிந்து அவர்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×