search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical education fees"

    தனியார் பல்கலைக்கழகங்களில் ஆண்டு மருத்துவ கல்வி கட்டணமாக ரூ.13 லட்சம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் அரசு மருத்துவ பல்கலைக் கழகங்களை தாண்டி நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் பல மருத்துவ கல்லூரிகளை நடத்தி வருகின்றனர்.

    இங்கு மாணவர்களிடம் பல லட்சம் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ரூ.40 லட்சம், ரூ.50 லட்சம் என்ற அளவுக்கெல்லாம் நன்கொடை வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் தரப்பில் இருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் ஜவகர் சண்முகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்தார். அதில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ கல்வி கட்டணம் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இதற்கு உரிய கட்டணத்தை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானிய குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வருகிற 30-ந்தேதிக்குள் மருத்துவ கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க குழு ஒன்றை பல்கலைக்கழக மானிய குழு அமைக்க வேண்டும். இந்த குழு அனைத்து தரப்புகளின் கருத்தை கேட்டு 6 மாதத்துக்குள் கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    அதுவரை ஆண்டு கல்வி கட்டணமாக ரூ.13 லட்சம் வசூலிக்க வேண்டும், குழு நிர்ணயித்த தொகையை விட மாணவர்கள் கட்டணம் அதிகமாக செலுத்தி இருந்தால் அதை பல்கலைக் கழகங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும், குறைவாக செலுத்தி இருந்தால் மீதித் தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். #HighCourt
    ×