என் மலர்
நீங்கள் தேடியது "Measures to increase forest cover"
- கொளகூர் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக வன நாள் விழா மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
- கொளகூர் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களைக் கொண்டு பலன் தரக்கூடிய நாட்டு மரக்கன்றுகளை கல்எக்டர் கார்மேகம் நட்டு வைத்தார்.
சேலம்:
ஏற்காடு அருகே கொளகூர் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக வன நாள் விழா மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. விழாவையொட்டி ஏற்காடு, கொளகூர் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களைக் கொண்டு பலன் தரக்கூடிய நாட்டு மரக்கன்றுகளை கல்எக்டர் கார்மேகம் நட்டு வைத்தார். மேலும், வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை கலெக்டர் வெளியிட்டார்.
விழாவில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 2021-ம் வருட கணக்கீட்டின் படி மிக அடர்த்தியான காடுகள் 197.62 ச.கி.மீ, மித அடர்த்தி காடுகள் 757.20 ச.கி.மீ மற்றும் திறந்த வெளி காடுகள் 516.30 ச.கி.மீ ஆகியவற்றை உள்ளடக்கிய 1,471.12 சதுர கிலோ மீட்டர் அதாவது மாவட்ட நிலப்பரப்பில் 28.09 சதவீத வனப்பரப்பை கொண்டுள்ளது. இது 2019-ம் வருட கணக்கெடுப்பை விட 1.28 சதவீதம் அதிகமாகும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்ட வன நிலப்பரப்பை 33 சதவீதமாக அடுத்த 10 ஆண்டுகளில் உயர்த்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சேலம் மாவட்டத்தில், வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தோடு வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகள் மூலம் 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு நாற்றாங்கால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல் அதை முறையாக பராமரிக்கவும் வேண்டும். அனைத்து வகையான உபரி இடங்களிலும் மரக்கன்றுகள் நடுவது தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
சேலம் மாவட்ட வனப் பகுதிகளில் யானை, காட்டு மாடு, புள்ளி மான், சருகு மான் உள்ளிட்ட பாலூட்டி இனங்களும், செந்தலை கிளி, நீல முக செண்பகம், சோலை பாடி, மாங்குயில், செம்மீசை சின்னான், ஊதா தேன் சிட்டு உள்ளிட்ட பறவையினங்களும், பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகளுக்கும், மலைப் பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்ட பாம்பு வகைகளும் பல்வேறு வகையான பூச்சிகளும் காணப்படுகின்றன.
உலகில் வேறு எங்கும் காண முடியாத பாறை எலி, கவசம் வால் பாம்பு போன்ற ஓரிட வாழ் விலங்கினங்களும், வெர்னோனியா ஷெர்வரோயான்சிஸ் என்ற ஓரிட வாழ் தாவரமும் காணப்படுவது சேலம் மாவட்ட வனப் பகுதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக உள்ளது. சேலம் மாவட்ட வனப் பகுதிகளுக்கு உள்ள அச்சுறுத்தல்களில் வனத் தீயே முதன்மையானதாக உள்ளது. மாவட்டத்தில் வனத் தீயினை கட்டுப்படுத்த பல துறைகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, இ.வ.ப., வனவியல் விரிவாக்க அலுவலர் திரு.தி.கண்ணன், இணை இயக்குநர், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா செல்வகுமார், பாறை எலி ஆராய்ச்சியாளர் பிரவின்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






