search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhavaram Roundana"

    சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே மாடி பஸ் நிலையத்தை அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு நடக்கிறது. இதையொட்டி பஸ்களை இயக்கி நேற்று ஒத்திகை பார்க்கப்பட்டது.
    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாதவரத்தில் கீழ்தளம், மேள்தளத்துடன் மாடி பஸ்நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2011-ம் ஆண்டு அறிவித்தார்.



    இதையடுத்து பஸ்நிலையம் அமைப்பதற்காக மாதவரம் ரவுண்டானா அருகே 8 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய பஸ்நிலையத்தை அமைத்து நிர்வகிக்கும் பொறுப்பு பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.) ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது.

    தற்போது மாடி பஸ் நிலைய கட்டிடம், டிரைவர்கள்-கண்டக்டர்கள், பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக விசாலமான அறைகள், ஓட்டல்கள், வணிக வளாகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை போன்றவை நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.

    கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தனித்தனியாக நிறுத்துவதற்கு பார்கிங் வசதி, இலவச குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சமூக விரோதிகள், திருடர்கள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக நவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறை போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

    பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று 2 பஸ்கள் இயக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. கீழ் தளத்தில் இருந்து மேல் தளத்துக்கும், அங்கிருந்து கீழ் தளத்துக்கும் வளைவுகள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதுதொடர்பாக சி.எம்.டி.ஏ.அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மாதவரம் மாடி பஸ் நிலையத்தில் இருந்து காளகஸ்தி, திருப்பதி, நெல்லூர், விஜயவாடா என ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு, பாரிமுனை போன்ற பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

    எனவே பஸ் நிலையத்தின் மேல் தளத்தில் 50 பஸ்களும், கீழ் தளத்தில் 42 வெளியூர் பஸ்களும்(ஆந்திரா மார்க்கம்), 9 மாநகர பஸ்களும் நிறுத்த கூடிய வகையில் பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிட்டது. அடுத்த மாதம் (ஜூலை) பஸ்நிலையத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் புதிய பஸ்நிலையத்தை திறந்து வைப்பார். இந்த பஸ்நிலையத்துக்கு ‘இண்டர்சிட்டி பஸ் டெரிமினல்’ (நகரத்தின் உள்ளே, வெளியே செல்லும் பஸ் முனையம்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சி.எம்.டி.ஏ. நிர்வாகம் கோயம்பேடு பஸ் நிலையத்தை போன்றே மாதவரம் பஸ்நிலையத்தையும் நவீன முறையில் அமைத்துள்ளது. எனவே மாடி பஸ் நிலையம் மாதவரத்தின் முக்கிய அடையாளமாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. 
    ×