search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lottery scam Martin"

    லாட்டரி ஊழல் வழக்கில் சிக்கிய கோவையை சேர்ந்த மாட்டினுக்கு தற்காலிக அடிப்படையில் ஓராண்டுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று ஐகோர்ட்டில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கோவையை சேர்ந்தவர் மார்ட்டின். லாட்டரி அதிபரான இவர், தன்னுடைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பம் செய்தார். ஆனால், அவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதை சுட்டிக்காட்டி, அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மார்ட்டின் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்த கோவை போலீஸ் கமி‌ஷனர், ‘மனுதாரர் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதை அவர் மறைத்துள்ளார்’ என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து இந்த வழக்கில், மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் மத்திய அரசு வக்கீல் என்.ரமேஷ் ஆஜரானார். அவர், ‘கேரளாவில் ரூ.1,400 கோடி லாட்டரி ஊழல் செய்ததாக மார்ட்டின் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கேரளாவில் உள்ள அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், இந்த ரூ.1,400 கோடி லாட்டரி ஊழல் தொடர்பாக தனியாக ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளின் விவரங்களை மார்ட்டின் தெரிவிக்காமல், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்’ என்று கூறினார்.

    இதற்கு மார்ட்டின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். கேரள மாநில அரசு தன் மாநில லாட்டரியை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டது.

    அதனால், பூடான் நாட்டு லாட்டரியை விற்பனை செய்ததாக கூறி மார்ட்டினுக்கு எதிராக கேரள மாநில அரசு செயல்பட்டது. ஆனால், மார்ட்டின் தன் மீதான வழக்குகளின் விவரங்களை மறைக்கவில்லை’ என்றார்.

    அப்போது பாஸ்போர்ட் துறை வக்கீல் என்.ரமேஷ், ‘மார்ட்டின் அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பினால், அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ள எர்ணாகுளம் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அனுமதிப் பெற்று விண்ணப்பித்தால், தற்காலிக அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும்’ என்றார்.

    இதையடுத்து இந்த வழக்கை வருகிற 10-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று இதுகுறித்து விரிவான மனுவை தாக்கல் செய்யும்படி பாஸ்போர்ட் வக்கீலுக்கு உத்தரவிட்டார்.
    ×