search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Lord Guru"

  • குரு வேறு; தட்சிணாமூர்த்தி வேறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
  • பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும்.

  ஆதிபரம்பொருளாகிய இறைவன் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மூன்று அம்சங்களாக்கினார்.

  பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.

  பிரகஸ்பதி குருவானது எப்படி?

  வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையவேண்டும் என்று லட்சியம் கொண்ட பிரகஸ்பதி நான்கு வகை வேதங்களையும் கற்று, பல யாகங்களும் ஹோமங்களும் செய்தார். அஸ்வமேத யாகம் போன்ற சிறந்த யாகங்களை நூற்றுக்கும்மேல் செய்தார். இப்படி சிறப்பான ஹோமங்களைச் செய்து மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர்தான் தேவர்களுக்கு குருவாக முடியும். அதன்படி தேர்வு பெற்று பிரகஸ்பதி தேவர்களுக்கு குருவானார்.

  அத்துடன் அவர் திருப்தி அடைந்துவிடவில்லை. தேவ குருவைவிட சிறப்பான இடத்தை அடைய மேலும் பல அரிய ஹோமங்களும் யாகங்களும் செய்ததுடன், திட்டை தலத்துக்கு வந்து, அங்கு கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். அவர் தவத்துக்கு மெச்சிய சிவபெருமான் அவருக்கு நவகிரக பதவியை வழங்கினார்.

  அதன்படி நவகிரகங்களில் சுபகிரகமான குரு பகவானாக ஏற்றம் பெற்றார். அது முதற்கொண்டு திட்டையில் சுவாமி சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் குரு பகவான் தனிச்சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.

  சிவபெருமானின் ஞானவடிவமான தட்சிணாமூர்த்தி ஆதிகுரு என அழைக்கப்படுகிறார்.

  இவரை வழிபடுபவர்களுக்கு அருளையும், ஞானத்தையும் வழங்கக்கூடியவர். எல்லா சிவன் கோவில்களிலும் தென் கோஷ்டத்தில் இவர் எழுந்தருளியிருப்பார். குரு பகவான் இல்லாத திருக்கோவில்களில் தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடுகின்றனர். ஆனால் குரு வேறு; தட்சிணாமூர்த்தி வேறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். குருவுக்கு செய்யும் பரிகாரங்களை குருவுக்கே செய்யவேண்டும்.

  குருவால் ஏற்படும் தோஷங்களுக்கு குருவையே வழிபடவேண்டும். உலகம் முழுவதும் உள்ள பணம், பொன் விஷயங்களுக்கு குருவே அதிபதி. எனவே பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும். உங்களுக்கு பொருள் வந்துவிட்டது. அடுத்தது என்ன, திருமணம்தானே? அதற்கும் குருவின் அருள் வேண்டும்.

  குரு பலம்

  ஒருமுறை பார்வதி தேவியானவர் பூவுலகில் பிறந்து, சிவபெருமானை திருமணம் செய்துகொள்ள கடுந்தவம் புரிந்தார். நாட்கள் கடந்துகொண்டே இருந்தன. ஆனால் திருமணம் கைகூடி வரவில்லை. தேவர்கள் சிவ பெருமானிடம் சென்று தேவியை மணந்து கொள்ளவேண்டுமென்று முறையிட்டனர். அப்போது சிவன், "தேவியைத் திருமணம் செய்துகொள்ள நானும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்ன செய்வது? தேவிக்கு இன்னும் குரு பலம் வரவில்லையே' என்றார். உலக அன்னையான தேவிக்கே குரு பலம் இருந்தால்தான் திருமணம் நடைபெறும் எனும்போது சாமான்யர்களான நம் நிலை என்ன? எனவே திருமணம் தடைப்படுபவர்கள் அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திட்டைக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து, குரு பகவானை அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்கினால், திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம்.

  சரி; பொருள் சேர்ந்துவிட்டது. திருமணமும் ஆகிவிட்டது. குழந்தை வரம் கிடைக்க வில்லை. அப்போதும் குரு பகவானையே வழிபடவேண்டும். ஏனென்றால் குரு பகவான் புத்திரகாரகன் என்று அழைக்கப்படுகின்றார்.

  அவர் அருள் இருந்தால்தான் குழந்தை பிறக்கும்.

  நவீன விஞ்ஞான ஆய்வுகளும் இதையே கூறுகின்றன. வியாழகிரகத்திலிருந்து வரும் மஞ்சள் நிறமான மீத்தேன் கதிர்கள்தான் உயிரினங்கள் உண்டாகக் காரணமென்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  வித்யாகாரகன் குரு பகவான்

  குருவருளால் பொருள், திருமணம், குழந்தைச் செல்வம் என எல்லாம் பெற்று விட்டீர்கள். அந்தக் குழந்தை நல்லபடியாகப் படித்து முன்னேற வேண்டும் அல்லவா? அதற்கும் குரு பகவான்தான் அருளவேண்டும். கல்வியில் முன்னேற்றம், வேத வேதாந்த சாஸ்திர அறிவு, நல்ல புத்தி, ஞாபக சக்தி அனைத்தையும் வழங்குபவர் குரு பகவான்தான். அப்படி நல்லபடியாகப் படித்துத் தேறிய குழந்தைகளுக்கு உரிய பதவியை வழங்குபவரும் குரு பகவான் தான். அவர் அருளால்தான் அரசியல் தொடர்பான சட்டமன்ற உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர், அமைச்சர் ஆகிய பதவிகள் கிடைக்கும். அதுபோலவே நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வங்கிகள் மற்றும் முக்கியமான நிர்வாகத் துறைகளில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் குரு அருள் பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

  குரு பார்க்க கோடி நன்மை

  நவகிரகங்களில் முழுமையான சுப கிரகம் குரு பகவான் ஒருவரே. சந்திரன் சுபரானாலும் இவர் வளர்பிறையில் மட்டுமே சுபராகக் கருதப்படுவார். புதன் சுபகிரகங்களோடு சேரும்போது மட்டுமே சுபர். அசுப கிரகங்களோடு சேரும்போது பாபத் தன்மை அடைந்துவிடுவார். சுக்கிரன் சுப கிரகமானாலும் அவர் அசுர இனத்தில் பிறந்ததால் அவரை முழு சுபராக ஏற்பதில்லை. எனவே, தேவகுருவான குரு பகவானே முழுச்சுபராக கருதப்படுகின்றார்.

  சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐந்து கிரகங்களையும் முழு பாப கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்துள்ளது. இந்த ஐந்து கிரகங்களினால் வரும் தோஷங்களைக் கட்டுப்படுத்துகிற சக்தி முழு சுபகிரகமான குரு பகவானுக்கு உண்டு. குருவின் 5, 7, 9-ஆம் பார்வைகள் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. எனவேதான் "குரு பார்க்க கோடி தோஷம் விலகும்', "குரு பார்க்க கோடி நன்மை' என்று பழமொழிகள் உருவாகின.

  ×