search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lokayukta members"

    லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 2 பேரை நியமித்த உத்தரவுக்கு தடை விதித்து, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #Lokayukta #HighCourtMaduraiBench
    மதுரை:

    கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நம் நாட்டில் ஊழலை முழுவதும் ஒழிக்கும் வகையில் லோக் ஆயுக்தா சட்டம் 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் முறையாக விசாரிப்பது லோக் ஆயுக்தாவின் கடமை. தமிழகத்தில் கடந்த ஆண்டு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.

    இந்த அமைப்பின் தலைவராக ஐகோர்ட்டு நீதிபதி அல்லது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் 25 ஆண்டு பணியாற்றிய அனுபவம் உள்ளவரை நியமிக்க வேண்டும். 4 உறுப்பினர்களில் சட்டத்துறையைச் சேர்ந்த 2 பேரையும், பிற துறைகளில் பணியாற்றிய 2 பேரையும் நியமிக்க வேண்டும்.

    இந்த நிலையில் லோக் ஆயுக்தாவின் தலைவராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத்துறையை சேர்ந்த 2 உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டத்துறையை சேராத உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் என்பவரும், மற்றொரு உறுப்பினராக ஆறுமுகம் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த 1-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே அவர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள் கூறும்போது, “தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தியதை மகிழ்ச்சியுடன் இந்த கோர்ட்டு வரவேற்கிறது. ஆனால் அதன் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம், அ.தி.மு.க.வில் உள்ள ஆறுமுகம் ஆகியோர் விதிகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரையும் லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமனம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

    ஆனால் லோக் ஆயுக்தாவை தொடங்குவதற்கும், அதன் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் செயல்படவும் எந்த தடையும் கிடையாது. இந்த வழக்கு குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். அடுத்த விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #Lokayukta #HighCourtMaduraiBench
    ×