என் மலர்
நீங்கள் தேடியது "lock not broken"
- டாஸ்மாக் கடையில் தினமும் லட்சக்கணக்கில் மது பாட்டில்கள் விற்பனையாகிறது.
- பெரிய இரும்பு கம்பியால் கடையின் இரும்பு கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் பக்கிங் காம் கால்வாய் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை உள்ள பகுதியில் குடியிருப்பு பகுதிகள் ஏதும் இல்லை. இது போல் இரவு 10 மணிக்கு மேல் இந்த வழியில் பொதுமக்களின் போக்குவரத்தும் அதிகமாக இருக்காது. இங்குள்ள டாஸ்மாக் கடையில் தினமும் லட்சக்கணக்கில் மது பாட்டில்கள் விற்பனையாகிறது.
இந்நிலையில் நேற்று இரவு டாஸ்மாக் விற்பனையாளர்கள் விற்பனையை முடித்துவிட்டு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்று உள்ளனர். அப்போது இரவு நேரத்தில் மர்ம நபர்கள் டாஸ்மார்க் கடையை உடைத்து அங்கு இருக்கும் மது பாட்டில்களை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி உள்ளனர். முன்னதாக மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைப்பதற்கு ஏதுவாக கடைக்கு முன்பாக இருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர். கடையின் எதிரில் இருந்த விளக்குகளையும் உடைத்தனர்.
பின்னர் பெரிய இரும்பு கம்பியால் கடையின் இரும்பு கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த இரும்பு கதவின் பூட்டு உடைபடவில்லை. இதனால் மர்ம மனிதர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் இரும்பு கதவு உடைக்க முயற்சி செய்த சம்பவம் குறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் பெயரில் மரக்காணம் போலீசார் மற்றும் டாஸ்மார்க் விற்பனையாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கடையின் பூட்டு உடைபடாததால் உள்ளே இருந்த பல லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் தப்பியது தெரியவந்தது. இந்த கடையை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை கண்டுபிடிக்க மரக்காணம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






