search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor corruption case"

    • ஆம்ஆத்மி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால் தடுத்து நிறுத்தும் வகையில் அதிரடி படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
    • விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன் கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    கடந்த 2021-22-ம் ஆண்டு ஆம்ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம்ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    மதுபான வியாபாரிகளில் சிலருக்கு மட்டும் உரிமம் வழங்குவதற்காக ஆம்ஆத்மி தலைவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகவும் அந்த பணத்தை ஆம்ஆத்மி தலைவர்கள் கோவா சட்டசபை தேர்தலில் செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படை யில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகரராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 23-ந்தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர். மதுபானக் கொள்கையை வெளியிட்ட கலால் துறை மந்திரி என்பதால் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியமாக கருதப்பட்டது.

    ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது.

    மணீஷ் சிசோடியாவை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று ஆஜராக போவதாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா அறிவித்தார். இந்த நிலையில் இன்று காலை முதல்-மந்திரி கெஜ்ரிவால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'சி.பி.ஐ. விசாரணையின் போது சிசோடியாவை கைது செய்ய உள்ளனர்' என்று தெரிவித்து இருந்தார்.

    இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் முக்கிய இடங்கள் மற்றும் சி.பி.ஐ. அலுவகம் முன்பு 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆம்ஆத்மி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால் தடுத்து நிறுத்தும் வகையில் அதிரடி படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராவதற்காக 10 மணிக்கு தனது வீட்டில் இருந்து மணீஷ் சிசோடியா புறப்பட்டார். அப்போது அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன் கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது. நாங்கள் பகத்சிங் வழி வந்தவர்கள். எனவே சிறைக்கு செல்வதெல்லாம் சாதாரண விஷயம்' என்று கூறி இருந்தார்.

    அவர் வீட்டில் இருந்து திறந்த காரில் சென்றார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காரை சுற்றி நடந்து வந்தனர். 'சிசோடியா சிந்தா பாத்' என்று அவர்கள் முழக்கமிட்டபடி சென்றனர்.

    ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு அவர் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×