search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishnagiri cheating"

    கிருஷ்ணகிரியில் உள்ள வங்கியில் கவரிங் நகைகளை வைத்து பெண் ஊழியர் லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக ஒரு பெண் உள்ளார். இவர் நகையை தரம்பார்த்து விட்டு அனுமதி கொடுத்த பிறகு தான் நகை கடன் கொடுப்பார்கள்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பெண் ஊழியர் சிலரது துணையுடன் கவரிங் நகைகளை தங்க நகை என்று கூறி அடகு வைத்து பணம் மோசடி செய்து உள்ளார். இதேபோல வாடிக்கையாளர்கள் வைத்த நகைகளையும் மாற்றி அதற்கு பதிலாக கவரிங் நகைகளை லாக்கரில் வைத்து உள்ளார்.

    சமீபத்தில் வங்கி லாக்கரை மானேஜர் திறந்து பார்த்தபோது நகைகள் கருத்திருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்து இது குறித்து அந்த பெண் ஊழியரிடம் கேட்டார். அப்போது தான் கவரிங் நகைகளை தங்க நகை என்று கூறி அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு அந்த பெண் ஊழியரின் கணவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசில் எதுவும் புகார் செய்யவில்லை. தற்போது அந்த வங்கியில் நகை கடன் கொடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நகைக்கடன் வாங்கியவர்கள் தொடர்பான விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆய்வு பணி முடிந்த பிறகு தான் எவ்வளவு மோசடி நடந்துள்ளது என்பது தெரியவரும். அதன் பிறகு போலீசில் புகார் கொடுத்து அந்த பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க மானேஜர் திட்டமிட்டுள்ளார்.
    ×