search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kosasthalaiyar River bridge work"

    கொசஸ்தலை ஆற்றில் தடுப்பு அணை பணிகளை ஆகஸ்டு மாத இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் ‌ஷட்டர்கள் வழியாக தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.

    அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஓதப்பை, சோமதேவன்பட்டு, கொரகண்தண்டலம், மோவூர், மெய்யூர், செம்பேடு, தாமரை பாக்கம், அணைக்கட்டு வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.

    கடந்த 2015-ம் வருடம் பெய்த மழைக்கு அணை முழுவதுமாக நிரம்பியதால் அதிகபட்சமாக வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. மொத்தம் 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.

    பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன்படும் விதத்திலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காகவும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஓதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட ரூ. 6.70 கோடி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிதியை கொண்டு 200 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு அணை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கப்பட்டது.

    கடந்த செப்டம்பர் மாதம் பலத்த மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடுப்பு அணை கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டன.

    தற்போது கோடை வெயில் காரணமாக கொசஸ்தலை ஆறு வறண்டு காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து தடுப்பு அணை கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஆகஸ்டு மாத இறுதிக்குள் தடுப்பு அணை பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews

    ×