search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kosasthalaiyar"

    மழை பொய்த்து போனதாலும் கோடை வெயில் வெளுத்து வாங்குவதாலும் ஆரணி, கொசஸ்தலை ஆறுகள் தற்போது முற்றிலும் வறண்டு விட்டன.
    ஊத்துக்கோட்டை:

    ஆரணி ஆறு ஆந்திராவில் உள்ள நகரியில் உற்பத்தி ஆகி பிச்சாட்டூர், சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம், ஆரணி, பொன்னேரி, பழவேற்காடு வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது. இதே போல் கொசஸ்தலை ஆறு பள்ளிபட்டு அருகே உற்பத்தி ஆகி பூண்டி வழியாக ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், தாமரைபாக்கம், அணைகட்டு பகுதிகள் வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.

    ஆரணி ஆறு தமிழக எல்லையில் இருந்து 52 கிலோ மீட்டரும், கொசஸ்தலை ஆறு சுமார் 55 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து கடலில் சேருகிறது. இந்த 2 ஆறுகளின் ஓரமாக 550-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆற்றங்கரை ஓரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலமாக மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    மேலும் ஆற்று நீரால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலமும் பயன் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் மழை பொய்த்து போனதாலும் கோடை வெயில் வெளுத்து வாங்குவதாலும் ஆரணி, கொசஸ்தலை ஆறுகள் தற்போது முற்றிலும் வறண்டு விட்டன. இதே போல் இந்த ஆறுகளின் தண்ணீரை சேமித்து வைக்கும் பூண்டி, பிச்சாட்டூர் அணைகளும் வற்றி விட்டன. ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு அணைகளும் முற்றிலும் வறண்டு தண்ணீர் இல்லாமல் உள்ளன.

    ஆறுகளில் நீர் பாயாத நிலை ஏற்பட்டு உள்ளதால் ஆற்றங்கரைகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டன. இதன் காரணமாக ஆழ்துளை கிணறுகள் வற்றி கரையோர கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கொசஸ்தலை ஆறு பாயும் பூண்டி அருகே உள்ள ஆற்றம்பாக்கம், ஒதப்பை, நம்பாக்கம், மெய்யூர், மயிலாப்பூர், ராஜபாளையம், மோவூர், திருக்கண்டலம், அனைகட்டு, புன்ன பாக்கம், செம்பேடு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    இதே போல் ஆரணி ஆற்று படுக்கையில் உள்ள ஊத்துக்கோட்டை, கீழ்சிற்றபாக்கம், மேல்சிற்றபாக்கம், பால்ரெட்டிகண்டிகை, தாராட்சி, பாலவாக்கம், லட்சிவாக்கம், சூளமேனி, தண்டலம், ராள்ளபாடி, கொசவன் பேட்டை பகுதிகளிலும் குடிநீர் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
    ×