search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kollimalai Pepper"

    • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகு, மற்ற பகுதி மிளகுகளை காட்டிலும் காரத்தன்மை அதிகம் கொண்டதாகும்.
    • கொல்லிமலையில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகு பயிரிடப்பட்டு உள்ளன.

    நாமக்கல்:

    ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்த குறியீடு அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.

    தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச்சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மரச்சிற்பம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, பத்தமடை பாய் உள்ளிட்ட பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. சேலம் ஜவ்வரிசி உள்பட 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரை தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகு, மற்ற பகுதி மிளகுகளை காட்டிலும் காரத்தன்மை அதிகம் கொண்டதாகும். எனவே கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது அங்கு வாழும் பழங்குடியின விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். இதற்கான நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படும் கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 4,663 அடி உயரம் கொண்டது. 280 சதுர கி.மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த மலைப்பகுதியில் 14 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் மா, பலா, வாழை, அன்னாசி, மிளகு, நெல், மரவள்ளி, சிறு தானியங்கள் பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர்.

    இதில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குவது கொல்லிமலை மிளகு. கொல்லிமலையில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகு பயிரிடப்பட்டு உள்ளன.

    சில்வர்ஒக் மரங்களில் ஊடுபயிராக பரவ விடப்படும் மிளகு கொடிகள் வளர்ந்து பருவநிலையை எட்ட 4 ஆண்டுகள் வரை ஆகும். அறுவடைக்கு ஏற்றவாறு மிளகு கொடி படர்ந்து விட்டால், குறைந்தபட்சம் 15 முதல் 18 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    மிளகு வகைகளில் பன்னியூர்1, கரிமுண்டா, பன்னியூர்5 ஆகியவை இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. கொல்லிமலை மிளகிற்கு புவிசார் குறியீடு கிடைக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மிளகு வளர்ப்பிற்கான சீதோஷ்ண நிலை கொல்லிமலை பகுதியில் நன்றாக உள்ளது. இங்கு பன்னியூர் மற்றும் கரிமுண்டா ரக மிளகுகள் விளைந்து வருகிறது. இருந்தபோதிலும் பன்னியூர் ரகமே அதிக அளவில் காணப்படுகிறது. மலைவாழ் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக செம்மேடு மற்றும் பவர்காடு பகுதியில் தலா ஒரு மிளகு சேமிக்கும் குளிர்பதன கிடங்கை அமைத்து கொடுக்க வேண்டும்.

    கொல்லிமலையில் இயற்கை விவசாய முறையில் மிளகு விளைவிக்கப்படுவதால் இங்குள்ள மிளகிற்கு புவிசார் குறியீடு கிடைத்தால், சீரான விலை கிடைக்கவும், ஏற்றுமதி அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும் என்கின்றனர் விவசாயிகள்.

    ×