search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodaikanal farmers suffer"

    • தமிழகத்தில் நெல்கொள்முதல் செய்ய அரசுசார்பில் மாவட்டந்தோறும் நிலையங்கள் திறக்கப்பட்டு அரசே விலை நிர்ணயம் செய்து வாங்குகிறது.
    • மலைத்தோட்ட காய்கறிகளுக்கும் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் காய்கறிகளை வாங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புவிசார் குறியீடு பெற்ற வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட், பட்டானி, முட்டைகோஸ், காலிபிளவர், ஆரஞ்சுபழம், ஆப்பிள், பிளம்ஸ், பேரிச்சை உள்ளிட்ட பல்வேறு மலைத்தோட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

    கொடைக்கானல் நகரில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றபடி இங்கு விளையும் காய்கறிகளுக்கு வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் விளைச்சல் அதிகரித்தாலும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இங்கு விளையும் காய்கறிகள் மதுரை, திருச்சி, ஒட்டன்சத்திரம், சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த காய்கறிகள் நேரடியாக வியாபாரிகளை சென்றடையாமல் இடைத்தரகர்கள் மூலம் செல்வதால் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை. மேலும் செலவு செய்த தொகை கூட கிடைக்காத நிலை ஏற்படுகிறது. வங்கியில் கடன் வாங்கி, இரவு பகல் பாராமல் தங்கள் நிலத்தை பாதுகாத்து அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பும் நேரத்தில் இடைத்தரகர்கள் நேரடியாக வந்து தாங்கள் காட்டும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யுமாறு கூறுகின்றனர்.

    இதனால் அவர்களுக்கு குறைந்த அளவிலேயே லாபம் கிடைக்கிறது. குறிப்பாக தற்போது ஒரு கிலோ கேரட் ரூ.15 முதல் ரூ.20 வரை விவசாயிகளிடம் வாங்கப்படுகிறது. ஆனால் நகர்புறங்களில் ஒரு கிலோ கேரட் ரூ.100 மற்றும் அதற்குமேல் விற்கப்படுகிறது. பெரும்பாலான விளைபொருட்களும் இதேபோல்தான் இடைத்தரகர்கள் தலையீட்டால் விவசாயிகள் பெரும்பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் நெல்கொள்முதல் செய்ய அரசுசார்பில் மாவட்டந்தோறும் நிலையங்கள் திறக்கப்பட்டு அரசே விலை நிர்ணயம் செய்து வாங்குகிறது. அதேபோல மலைத்தோட்ட காய்கறிகளுக்கும் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் காய்கறிகளை வாங்க வேண்டும் என்று கொடைக்கானல் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×