என் மலர்
நீங்கள் தேடியது "Kodaikanal bus stand"
- அரசுப் பஸ்கள் நிறுத்தப்பட வேண்டிய இடத்தில் வெளியூர் தனியார் வேன்களை நிறுத்தி சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்வதால் அடிக்கடி அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.
- மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் ஐ.எஸ்.ஓ தரம் பெற்ற நகராட்சி பஸ் நிலையம் உள்ளது. மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது இந்த பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு பல ஆண்டுகள் மிகவும் சுகாதாரமாகவும் குப்பைகள் இல்லாத, ஆக்கிரமிப்புகள் அற்ற பஸ் நிலையமாக இருந்தது. சுகாதாரம் முழுமையாக பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தனியார் வாகனங்களின் ஆக்கரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசலும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
அதோடு வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் புகுந்து பயணிகளை ஏற்றி செல்வதால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அரசு பஸ்கள் நிறுத்தப்பட வேண்டிய நிறுத்தத்தில் வெளியூர் தனியார் சுற்றுலா வேன்கள் நிறுத்தப்படுகிறது.
அரசுப் பஸ்கள் நிறுத்தப்பட வேண்டிய இடத்தில் வெளியூர் தனியார் வேன்களை நிறுத்தி சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்வதால் அடிக்கடி அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. அரசு பஸ் செல்ல வேண்டிய பஸ் நிலையத்திற்குள் தனியார் சுற்றுலா வேன் மற்றும் கார்கள் செல்வதால் பஸ் நிலையத்திற்குள் பஸ்சில் ஏறிச் செல்ல காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் உயிர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பலமுறை போராட்டமும் நடத்தினர். அந்த சமயத்தில் கண் துடைப்பாக ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றி விட்டு அதன் பிறகு கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் தொடர்ந்து பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் பஸ் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தப்படும் வாகனங்களின் பின்புற பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் நுழையும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர்கள் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா வேன் மற்றும் கார் ஓட்டுனர்களிடம் பஸ் நிலையத்திற்குள் நுழையாதீர்கள்.
இங்கு வாகனங்களை நிறுத்தாதீர்கள் என்று கூறினால், இப்பகுதியில் கார் பார்க்கிங் இல்லாததால் தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி ஊழியர்கள் பஸ் நிலையத்திற்குள் வாகனங்களை நிறுத்திவிட்டு வாருங்கள் என்று கூறுவதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் சரியான நேரத்தில் பஸ்களை வெளியூருக்கு இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் எந்தப் பஸ் நிலையத்திற்குள்ளும் சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்படாத நிலையில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கொடைக்கானல் பஸ் நிலையத்திற்குள் வெளியூர் தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.






