search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanchipuram Crackers Factory"

    • இனி வரும் காலங்களில் பட்டாசு தொழிற்சாலைகளில் பயிற்சிகளும், வெடிமருந்தை கையாளும் போர்மேனுக்கு பாதுகாப்பு உடையும் வழங்கப்படும்.
    • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதலமைச்சர் உரிய நிவாரண தொகையை அறிவித்துள்ளார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியானது குறித்து சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், ஜி.கே.மணி, மரகதம் குமரவேல், செல்வப்பெருந் தகை, எஸ்.எஸ்.பாலாஜி, மாரிமுத்து, நாகை மாலி ஆகியோர் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து பேசினார்கள்.

    குறைந்தபட்ச பாதுகாப்பு கூட இல்லாமல் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர். அளவுக்கு அதிகமாக வெடி மருந்துகளை கொண்டு வந்து பட்டாசு தயாரித்துள்ளனர். இதனால்தான் வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

    வருங்காலங்களில் இது போன்ற விபத்தை தடுக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து நடந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் எம்.எல்.ஏ.க்களை அனுப்பி பணிகளை துரிதப்படுத்தினார். இறந்தவர்கள் குடும்பத்துக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் அரசு சார்பில் நிதி உதவி அளித்திருக்கிறார் என்று குறிப்பிட்டனர்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் பேசும் போது, அரசு வழங்கியுள்ள நிதி போதாது. இன்னும் அதிகமாக நிதி வழங்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்" என்றார்.

    வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசும்போது, "வெளிநாடுகளில் உள்ளது போல் பட்டாசு ஆலையில் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்களை அணிந்து பணியாற்ற தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்றார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:-

    நேற்று நடைபெற்ற வெடி விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் அரசு வழங்கியுள்ளது. எங்களது விருதுநகர் மாவட்டத்தில் 1,076 பட்டாசு ஆலைகள் இருந்தாலும் பெரும்பாலான விபத்துக்கள் சிறிய பட்டாசு ஆலைகளில்தான் நடை பெற்று வந்தது. அதற்கு காரணம் லாப நோக்கில் தொழிலை செய்வதால்தான் திடீர் விபத்துக்கள் ஏற்படுகிறது.

    இதற்காக நாங்கள் தேவையான கருத்தரங்குகளை நடத்தி உரிய பயிற்சியும் கொடுத்து இருக்கிறோம். காப்பீடும் செய்து கொடுக்கிறோம்.

    எனவே இனி வரும் காலங்களில் எந்த மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை இருந்தாலும் அதை ஒழுங்குபடுத்தி தேவையான பயிற்சிகளும் வெடிமருந்தை கையாளும் போர்மேனுக்கு பாதுகாப்பு உடையும் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதலமைச்சர் உரிய நிவாரண தொகையை அறிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×