search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Judges salary hike"

    உச்ச நீதிமன்ற உத்தரவிட்டும் நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு வழங்காததால் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் தயாராகி வருகின்றனர்.
    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை நீதிபதிகள் முதல் மாஜிஸ்திரேட்டுகள் வரையிலானவர்களுக்கு ஊதியத்தை உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுப்ரீம் கோர்ட்டு ஒரு ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வெங்கடராமரெட்டி தலைமையில், கேரளா ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பசந்த் மற்றும் மூத்த வக்கீல்கள் ஆகியோரை கொண்ட ஊதிய நிர்ணய குழுவை கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது.

    இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, இதுதொடர்பான அரசாணையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்தது. இந்த குழு நாடு முழுவதும் உள்ள நீதிபதிகளுக்கு எவ்வளவு ஊதியத்தை உயர்த்தலாம்? பிற சலுகைகள் என்னவெல்லாம் கொடுக்கலாம்? என்று அலசி ஆராய்ந்து வருகிறது. இதற்கு நீண்ட காலம் ஆகும் என்பதால், நீதிபதிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்று இந்த குழு முடிவு செய்தது.

    அதன்படி, நாடு முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை நீதிபதிகள் முதல் மாஜிஸ்திரேட்டு வரையிலானவர்களுக்கு, தற்போது அவர்கள் வாங்கி வரும் அடிப்படை ஊதியத்தில், 30 சதவீத உயர்வை தற்காலிகமாக வழங்கவேண்டும். ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து, விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த குழு அறிக்கை தாக்கல் செய்தது.

    இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 2018-ம் ஆண்டு மே மாதம் வரையிலான 30 சதவீத அடிப்படை ஊதிய உயர்வு பாக்கி தொகையை ஜூன் 30ந்தேதிக்குள் நீதிபதிகளுக்கு வழங்கவேண்டும். ஜூன் மாதம் முதல், அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதத்தை உயர்த்தி, ஜூலை மாதம் முதல் வழங்கவேண்டும் என்றும் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை பல மாநில அரசுகள் நிறைவேற்றி விட்டது. அதேநேரம், சின்ன மாநிலமான புதுச்சேரி மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று, நீதிபதிகளின் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதத்தை உயர்த்தி, கடந்த மாதம் அரசாணை பிறப்பித்து விட்டது.

    ஆனால், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாமல் உள்ளது. இதனால், தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    சின்ன மாநிலமான புதுச்சேரி மாநில அரசே சம்பளத்தை உயர்த்தி வழங்கி விட்டது. ஆனால், தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கருத்து கூறினர்.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாததற்காக தமிழக அரசு மீதும், ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் மீதும் கோர்ட்டு அவமதிப்பு நோட்டீசை வக்கீல்கள் மூலம் அனுப்பவும் நீதிபதிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், சில நீதிபதிகள், தமிழக அரசுக்கு கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நோட்டீசை அனுப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐகோர்ட்டு வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் விதமாக, நீதிபதிகளின் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதத்தை உயர்த்தவும், அந்த பாக்கி தொகையை வழங்குவது குறித்தும் அரசாணை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு பதிவுத் துறையில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால், இதுவரை அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. ஜூன் 30-ந்தேதிக்குள் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீத உயர்வை வழங்கப்படவில்லை’ என்று கூறப்பட்டது. தற்போது மாவட்ட நீதிபதிகள், கோர்ட்டு அவமதிப்பு நோட்டீசை அனுப்ப ஆயுத்தமாகி வருகின்றனர்.
    ×