search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewel Loan"

    • கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடன் பெற்ற பிறகு அட்டையில் குறிப்பிடப்பட்ட நகையின் எடை அளவும் மாறுபாடு இருந்தது
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் (57) என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களை நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா,ஆதார் கார்டு ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்து வர அனுப்பி விடுவாராம். அந்தச் சமயத்தில் விவசாயிகள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து வருவது அவரது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் நகைகடன் பெற்று விட்டு , திரும்பவும் நகைக்கடனை அடைத்துவிட்டு நகையை மீட்டு பார்த்தபோது அதில் அளவு குறைபாடு இருந்தது கண்டு சில விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    புதிதாக நகை வாங்கும்போது குறிப்பிட்டிருந்த எடையும், கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடன் பெற்ற பிறகு அட்டையில் குறிப்பிடப்பட்ட நகையின் எடை அளவும் மாறுபாடு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேகரிடமிருந்து 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என வங்கி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- மோசடியால் பாதிக்கப்பட்ட 504 வாடிக்கையாளர்களிடம் சமரசத் தீர்வு ஏற்பட்டுள்ளது. 30 வாடிக்கையாளர்களிடம் இழப்பீடு வழங்குவதில் உடன்பாடு ஏற்படவில்லை, மேலும் 50 வாடிக்கையாளர்களிடம் சமரச பேச்சு நடத்த வேண்டியுள்ளது. உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கேத்தனூர் வங்கி நகை மீட்பு இயக்கத்தினர் கூறுகையில், வங்கியில் நடைபெற்ற நகை மோசடியால், வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளோம். விரைவாக இழப்பீடு வழங்க பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். அதில் இழப்பீடு குறித்து அறிவிக்க வேண்டும். தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×