என் மலர்
நீங்கள் தேடியது "Inspection by officers"
- கடலூரில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் தகுதி இல்லாத 7 வாகனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
- பள்ளி வாகனத்தின் வாசல் அமைப்பு, அவசர வழி, தீயணைப்பு கருவிகள் உள்பட பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கடலூர்:
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 93 தனியார் பள்ளிகள் மற்றும் 15 கல்லூரிக்கு சொந்தமான வாகனங்கள் ஆய்வுக்காக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன. இங்கு அணிவகுத்து நின்ற பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகர், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், மாவட்ட கல்வி அலுவலர் கௌசர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கடலூர் முகுந்தன், நெய்வேலி பிரான்சிஸ், பண்ருட்டி ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் பள்ளி வாகனத்தின் வாசல் அமைப்பு, அவசர வழி, பிரதிபலிப்பான், படிக்கட்டு, டிரைவர் அறை, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள் உள்பட பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக வாகனங்களில் அவசர வழி, முதலுதவி பெட்டி போன்ற அனைத்து வசதிகளும் இருக்கிறதா? தீயணைப்பு கருவி செயல்படுகிறதா? என்று சோதனை செய்து பார்க்கப்பட்டது.
அப்போது இயக்குவதற்கு தகுதியில்லாத 7 வாகனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக தீயணைப்புத் துறை அலுவலர்கள் சார்பில் பஸ் டிரைவர்களுக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டாலோ? அல்லது வேறு ஏதேனும் விபத்து ஏற்பட்டாலோ? முதலில் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு செயல்விளக்கம் அளித்தனர். வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கண் பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி வாகன டிரைவர்கள் கலந்து கொண்டனர்.






