என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increases attendance of students"

    • காலை உணவு திட்டம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருக்கும்வரவேற்கதக்க ஒரு திட்டமாகும்.
    • 63 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3,415 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகிறார்கள்.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என சட்சபையில் அறிவித்தார்.

    அதன்படி மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாயமார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சிப் பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளிலும் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளிலும் 10,161 மாணவர்கள், என 1,545 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    இத்திட்டத்தின்படி, திங்கட்கிழமையன்று சேமியா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமையன்று கோதுமை ரவை மற்றும் காய்கறி கிச்சடி, புதன்கிழமையன்று வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமையன்று அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமையன்று சேமியா, காய்கறி கிச்சடி, ரவை கேசரி ஆகியவை மாணவ, மாணவிகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 16.09.2022 அன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் 63 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3,415 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் மூலம் ஒருங்கிணைப்பு பணிகள் செய்யப்படுகிறது.

    இத்திட்டம் குறித்து ஆசிரியை ஆயிஷா கூறுகையில் :

    நான் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை துவக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இத்திட்டம், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருக்கும்வரவேற்க தக்க ஒரு திட்டமாகும்.

    இத்திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தியதால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்-அமைச்சருக்கு எனது சார்பாகவும், பள்ளி சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த குழந்தையின் தாயார் ரேணுகா தேவி கூறுகையில், எனது மகள் பெயர் மித்ரா. நான் கூடலூர் காமத்தி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது மகள் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை துவக்க பள்ளியில், 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    நானும் எனது கணவரும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக காலைநேரத்தில் வேலைக்கு சென்று விடுவோம். எனது குழந்தைகளுக்கு காலையில் உணவு செய்து கொடுத்து விட்டு செல்வதென்பது மிகவும் சிரமமாக இருந்தது. சில நேரங்களில் காலை உணவு இல்லாமல் எனது மகள் பள்ளிக்கு செல்வாள். இச்சூழ்நிலையில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் மூலம் குழந்தைகளுக்கு பள்ளிகளில் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் காலை உணவுகள் வழங்கப்படுகிறது. கிராமக்குழந்தைகளின் தேவை அறிந்து இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    தமிழக அரசு, குழந்தைகளின் நலனை பேணிக்காக்கும் வகையில் இது போன்ற ஒரு சிறந்த திட்டத்தினை கொண்டு வந்து மிகச் சிறப்பாக நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தியமைக்காக, நீலகிரி மாவட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்து உள்ளனர்.  

    ×