search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heron seized"

    ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் என்னும் போதைப்பொருளை கடத்திவந்து இந்தியாவில் விற்க முயன்ற 3 வெளிநாட்டினரை டெல்லி போலீசார் கைது செய்தனர். #3heldinDelhi #Rs25croreheroin
    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கள்ளத்தனமாக ஹெராயின் கடத்தப்படுவதாக டெல்லி சிறப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து சாக்கெட் பகுதியில் உள்ள நகர நுழைவு வாயில்களில் தீவிரமான வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்,

    இந்நிலையில், டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்த ஓசோன்டூ என்பவரிடம் ஒப்படைப்பதற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து 5 கிலோ ஹெராயினை விமானம் மூலம் கடத்திவந்த எஸ்மத்துல்லா, கலிலுல்லா ஆகியோரையும், ஓசோன்டூ என்பவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீசார் கைது செய்தனர். 

    அவர்களிடம் இருந்து 4,200 அமெரிக்க டாலர்களும், சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    கைதான எஸ்மத்துல்லா, கலிலுல்லா ஆகியோர் மருத்துவ விசா மூலம் அடிக்கடி டெல்லி வந்து சென்றுள்ளனர். விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக கேப்சூல்களுக்குள் ஹெராயினை அடைத்து, அவற்றை விழுங்கி அவர்கள் இந்த கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கடந்த இரண்டாண்டுகளில் இவர்கள் டெல்லிக்கு 100 கிலோவுக்கும் அதிகமான ஹெராயினை கடத்தி வந்ததாகவும், கடந்த முறை மட்டும் 15 கிலோ கொண்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இவர்கள் கடத்திவந்த போதைப்பொருளை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த நைஜீரியாவை சேர்ந்த ஓசோன்டூ என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆறுமாத விசாவில் இந்தியா வந்துள்ளார். விசா காலம் முடிந்த பிறகு நைஜீரியாவுக்கு போகாமல் இங்கேயே கள்ளத்தனமாக தங்கி இருந்துள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் கடத்தல் ஹெராயினை,டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள வியாபாரிகளுக்கு கைமாற்றி விடுவதுடன், கனடா, இங்கிலாந்து. பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் கொரியர் மூலம் அனுப்பிவைத்து பணம் சம்பாதித்ததாக தெரியவந்துள்ளது. #3heldinDelhi #Rs25croreheroin 
    ×