என் மலர்
நீங்கள் தேடியது "Heavy rain falls"
- மழையின் காரணமாக கொட்டைமுந்திரி, மா, எலுமிச்சை, உள்ளிட்டவற்றில் பூ, பிஞ்சுகள் உற்பத்தி அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
- இன்று காலை வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை, கொட்டை முந்திரி உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயத்திற்கு மூலவைகை ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை இல்லாத காரணத்தால் வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் விவசாய நீர் தேவை தற்போது இரண்டு மடங்காகியுள்ளது. எனவே பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. குறிப்பாக வைகை ஆறு நீர் பிடிப்பு பகுதியான வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்தது.
இதனால் இன்று காலை முருக்கோடை கிராமம் வரை வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல மழையின் காரணமாக கொட்டைமுந்திரி, மா, எலுமிச்சை, உள்ளிட்டவற்றில் பூ, பிஞ்சுகள் உற்பத்தி அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே நேற்று பெய்த மழையின் காரணமாக இன்று காலை வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டது. பனிமூட்டம் சாலைகளை மறைத்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றனர். காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்ததால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தது.
- தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நீர் வரத்தொடங்கியது.
- தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை
கூடலூர்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையினால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
போடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையினால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து வரத்தொடங்கி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு அணையில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.55 அடியாக உள்ளது. வரத்து 390 கன அடி. திறப்பு 511 கன அடி. நீர் இருப்பு 4826 மி.கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 56.43 அடி. வரத்து 80 அடி. திறப்பு 869கன அடி. இருப்பு 2955 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடி. வரத்து 174 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.18 அடி. திறப்பு 6 கன அடி.
கொடைக்கானல் மற்றும் அதனையொட்டியுள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளம் அடுத்துள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மறு உத்தரவு வரும் வரை இங்கு பொதுமக்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரியாறு 6.6, தேக்கடி 5.8, கூடலூர் 14.8, உத்தமபாளையம் 0.2, வீரபாண்டி 21.4, மஞ்சளாறு 27, சோத்துப்பாறை 4.5, ஆண்டிபட்டி 2, போடி 24, பெரியகுளம் 53 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.






